IPL 2024, CSK vs RCB: பயிற்சியில் பங்கேற்காத கோலி – காரணம் என்ன? அப்டேட் கொடுத்த ஆர்சிபி!
2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் இதுவரையில் விராட் கோலி ஆர்சிபி அணியுடன் இணையாத நிலையில் எப்போது தனது பயிற்சியை தொடங்குவார் என்பது குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் 20ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில் விராட் கோலி மட்டும் இதுவரையில் அணியுடன் இணையவில்லை. முதல் போட்டியே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.
இதற்காக தோனி தலைமையிலான சிஎஸ்கே வீரர்கள் சேப்பாக்கத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. இதுவரையில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் 30 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், 20 போட்டிகளில் சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது. மேலும், ஆர்சிபி 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
சென்னையில் நடந்த 9 போட்டிகளில் சிஎஸ்கே அணி தான் 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதனை மாற்றுவதற்கு ஆர்சிபி தீவிரமாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்சிபி வீரர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்று வருகின்றனர். பாப் டூப்ளெசிஸ், பயிற்சியாளர் ஆண்டி பிளவர், இளம் வீரர்கள் என்று ஆர்சிபி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், ஆர்சிபியின் விராட் கோலி மட்டும் இதுவரையில் பயிற்சி முகாமில் பங்கேற்கவில்லை. கடைசியாக ஆர்சிபிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடினார். அதன் பிறகு இங்கிலாந்திற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இடம் பெறவில்லை. அனுஷ்கா சர்மாவின் பிரசவத்திற்காக அவருடன் இருப்பதற்காகவே லண்டன் சென்றார். அதன் பிறகு விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. இதுவரையில் இந்தியா திரும்பாத விராட் கோலி, ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியில் இணையவில்லை.
இன்னும் ஓரிரு நாட்களில் இந்தியா திரும்பும் விராட் கோலி, அதன் பிறகு ஆர்சிபி அணியுடன் இணைய இருப்பதாக் தகவல் வெளியாகியுள்ளது. வரும் 19 ஆம் தேதி ஆர்சிபியின் சொந்த மைதானமான பெங்களூர் மைதானத்தில் அன்பாக்ஸ் நிகழ்ச்சி நடத்தப்பட இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஆர்சிபி அணியின் பெயர் மாற்றப்பட இருப்பதாக கூறப்படுகிறது.