தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி ஆடுவதாக பிசிசிஐ வட்டாரங்கள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
டி20 உலக கோப்பையுடன் இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகினார் விராட் கோலி. வெள்ளைப்பந்து கிரிக்கெட் போட்டிகளுக்கான அணிகளுக்கு வெவ்வேறு கேப்டன்களை நியமிக்கமுடியாது என்று கூறி ஒருநாள் அணிக்கான கேப்டன்சியிலிருந்தும் கோலியை நீக்கிவிட்டு ரோஹித்தையே கேப்டனாக நியமித்தது பிசிசிஐ.
ஆனால் ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து விலக விரும்பாத விராட் கோலி, கேப்டன்சியிலிருந்து விலக மறுத்ததால், பிசிசிஐ அவரை வலுக்கட்டாயமாக நீக்கிவிட்டு ரோஹித்தை நியமித்ததாக தகவல் வெளியானது. அதனால் பிசிசிஐ மீது கோலி அதிருப்தியில் இருப்பதாகவும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் கேப்டன்சியில் ஆட விரும்பாமல், அந்த தொடரிலிருந்து மகளின் பிறந்தநாளை காரணம் காட்டி விலக்கு கேட்டதாகவும் தகவல் வெளியானது.
கோலி ஒருநாள் தொடரில் விலக்கு கேட்டதாக வெளியான தகவல், ரோஹித் - கோலி இடையே மோதல் என்ற சர்ச்சைக்கு உரமூட்டியது. ரோஹித் சர்மா காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய நிலையில், கோலி ஒருநாள் தொடரில் ரோஹித்தின் கேப்டன்சியில் ஆடாமல் விலகுகிறார் என்று பேசப்பட்டது.
இந்நிலையில், விராட் கோலி ஒருநாள் தொடரிலிருந்து விலக்கு எதுவும் கேட்கவில்லை என்றும், அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கண்டிப்பாக ஆடுவார் என்றும் பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
எனவே விராட் கோலி ஒருநாள் தொடரில் ஆடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய ரோஹித் சர்மா, ஒருநாள் தொடருக்கு தயாராகிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அது பின்னர் தான் தெரியவரும். ஆனால் இப்போதைக்கு கோலி ஒருநாள் தொடரில் ஆடுவது இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.
