இந்திய அணியின் கேப்டன் கோலி, சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். போட்டிக்கு போட்டி ஏதாவது ஒரு புதிய மைல்கல்லை எட்டிவருகிறார். 

வர இருக்கும் உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள ஒரு அணியாக கோலி தலைமையிலான இந்திய அணி பார்க்கப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் ரன்களை குவித்துவருவதால் ரன் மெஷின் என அழைக்கப்படும் கோலி, கேப்டனாக இந்திய அணிக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். அவரது கேப்டன்சி மீது ஏராளமான விமர்சனங்கள் இருந்தாலும், கேப்டன்சியில் விட்டதை பேட்டிங்கில் ஈடுகட்டி அணியை வெற்றி பெற செய்வதால், அவரது கேப்டன்சியில் உள்ள குறைபாடுகள் மறைந்துவிடுகின்றன. 

உலக கோப்பைக்கு முன்னதாக ஐபிஎல் நடக்க உள்ளது. இதுவரை ஐபிஎல்லில் ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத மூன்று அணிகளில் ஆர்சிபி அணியும் ஒன்று. ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே ஆகியோர் கேப்டனாக ஆர்சிபி அணிக்கு, அவர்களுக்கு பிறகு விராட் கோலி கேப்டனாக இருக்கிறார். 

உலக கோப்பைக்கு முன்னதாக ஐபிஎல் வெற்றி, ஒரு கேப்டனாக கோலிக்கு முக்கியம்; அதுமட்டுமல்லாமல் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத நிலையில் முதன்முறையாக கோப்பையை வெல்வது ஒரு கேப்டனாக கோலிக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கும். 

ஐபிஎல் வரும் 23ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி, நடப்பு சாம்பியனான தோனி தலைமையிலான சிஎஸ்கேவுடன் மோதுகிறது. 

ஐபிஎல் தொடங்க உள்ள நிலையில், தனது ஐபிஎல் அனுபவத்தில் தனக்கு மிகவும் பிடித்த மற்றும் மனதுக்கு நெருக்கமான போட்டி குறித்து கோலி மனம் திறந்துள்ளார். இதுகுறித்து பேசிய கோலி, 2010ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டி இன்னும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அந்த போட்டியில் 47 ரன்கள் அடித்தேன். ஆனால் கடுமையாக போராடி அந்த போட்டியில் கடைசி பந்தில் தோற்றோம். ஆர்சிபி அணிக்கு நான் ஆடியதில் அதுதான் மறக்க முடியாத இன்னிங்ஸ். 

அந்த போட்டியில் சிறப்பாக ஆடினேன். வெற்றிக்கு அருகில் சென்று கடைசி பந்தில் தோற்றோம். என்னுடைய அந்த இன்னிங்ஸ், எனக்கு மிகுந்த நம்பிக்கையளித்தது. அந்த போட்டியை பார்த்த அனைவருமே என்னை வெகுவாக பாராட்டினர். அந்த இன்னிங்ஸின் மூலம் எனக்கான அங்கீகாரமும் கிடைத்தது. அந்த போட்டியில் கடைசி ஓவரை வீசிய ஜாகீர் கான் உட்பட மும்பை அணியில் இருந்த சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன் சிங் என பலரும் எனது ஆட்டத்தை பார்த்து பாராட்டினர். அது என் கிரிக்கெட் வாழ்வில் மறக்க முடியாத மற்றும் மிக முக்கியமான தருணம் என கோலி தெரிவித்துள்ளார். 

2010ம் ஆண்டு நடந்த அந்த போட்டியில் அனில் கும்ப்ளே தலைமையிலான ஆர்சிபி அணியும் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 165 ரன்களை குவித்தது. 166 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணியில் ஜாக் காலிஸ், ரோஸ் டெய்லர், உத்தப்பா, ஒயிட் என ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிய மறுமுனையில் ராகுல் டிராவிட் அபாரமாக ஆடி அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார். டிராவிட்டுக்கு ஒத்துழைப்பு கொடுத்து அதிரடியாக ஆடிய அப்போதைய இளம் வீரர் விராட் கோலி, பவுண்டரியும் சிக்ஸருமாக பறக்கவிட்டார். ராகுல் டிராவிட் 71 ரன்கள் அடித்தார். 24 பந்துகளில் 47 ரன்களை குவித்து இன்னிங்ஸின் கடைசி பந்தில் விராட் கோலி அவுட்டானார். கடைசி பந்தில் ஆர்சிபி அணியின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவை என்ற நிலையில், அந்த பந்தில் கோலி ஆட்டமிழந்ததை அடுத்து கடைசி பந்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. 

அந்த போட்டியைத்தான் கோலி குறிப்பிட்டுள்ளார்.