உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பார்க்கப்படுகின்றன. 

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளும் வலுவாக இருந்தாலும், இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகளுக்குமே உலக கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. 

இந்திய அணியில் ரோஹித், தவான், கோலி என டாப் ஆர்டர் பேட்டிங்கும் பும்ரா, புவி, ஷமி என ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டும் குல்தீப், சாஹல் என ஸ்பின் பவுலிங் யூனிட்டும் மிகவும் சிறப்பாக உள்ளது. எனவே இந்த உலக கோப்பையில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் என்பதில் ஐயமில்லை. 

விராட் கோலி உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும் அவரது கேப்டன்சியில் சில குறைபாடுகள் உள்ளன. பவுலிங் சுழற்சி, கள வியூகம், ஃபீல்டிங் செட்டப், வீரர்களை கையாளும் விதம் ஆகியவற்றில் இன்னும் மேம்பட வேண்டியிருக்கிறது. எனினும் முன்னாள் கேப்டன் தோனியும் கேப்டன்சி திறன் மிகுந்த ரோஹித்தும் கோலியுடன் இருப்பது அவருக்கு கூடுதல் பலம்.

அதிலும் தோனி, கேப்டன் கோலிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார். ஸ்டம்புக்கு பின்னால் நின்றுகொண்டு பவுலர்களுக்கு தோனி கொடுக்கும் அறிவுரைகள், கோலியின் வேலையை எளிதாக்குகிறது. அதுமட்டுமல்லாமல் ஃபீல்டிங் செட்டப்பையும் இக்கட்டான சூழல்களில் தோனியே பார்த்துக்கொள்வார். அந்த வகையில் அனுபவ வீரரும் முன்னாள் கேப்டனுமான தோனி இருப்பது கோலிக்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. 

உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், தோனி அணியில் இருப்பது தன்னுடைய அதிர்ஷ்டம் என்று கேப்டன் கோலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கேப்டன் கோலி, முதல் பந்திலிருந்து 300வது பந்துவரை போட்டியின் ஒவ்வொரு நகர்வும் தோனிக்கு நன்றாக தெரியும். ஆட்டத்தை அவரைவிட யாராலும் நன்றாக புரிந்திருக்க முடியாது. அப்படியொரு அபாரமான கிரிக்கெட் மூளையை கொண்ட தோனி, ஸ்டம்புக்கு பின்னால் நிற்பது என்னுடைய அதிர்ஷ்டம் என்று கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.