இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஹாமில்டனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ஷ்ரேயாஸ் ஐயரின் அபார சதம், விராட் கோலியின் பொறுப்பான அரைசதம் மற்றும் கேஎல் ராகுலின் அதிரடியான பேட்டிங்கின் விளைவாக 50 ஓவரில் 347 ரன்களை குவித்தது. 

அறிமுக வீரர்கள் பிரித்வி ஷாவும் மயன்க் அகர்வாலும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 50 ரன்களை சேர்த்தனர். பிரித்வி ஷா 20 ரன்களிலும் மயன்க் அகர்வால் 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அரைசதம் அடித்த விராட் கோலி, உடனடியாக ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயரும் ராகுலும் இணைந்து 30 ஓவருக்கு பிறகு அடித்து ஆடி ஸ்கோரை உயர்த்தினர். ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்த ஷ்ரேயாஸ் ஐயர், 103 ரன்களில் ஆட்டமிழக்க, ராகுல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 64 பந்தில் 88 ரன்களை குவித்தார். இதையடுத்து இந்திய அணி 50 ஓவரில் 347 ரன்களை குவித்தது. 

348 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு மார்டின் கப்டிலும் ஹென்ரி நிகோல்ஸும் இணைந்து அருமையான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 85 ரன்களை சேர்த்தனர். கப்டில் 32 ரன்களில் ஆட்டமிழக்க, மூன்றாம் வரிசையில் களத்திற்கு வந்த டாம் பிளண்டெல் வெறும் 9 ரன்களில் அவுட்டானார். 

இதையடுத்து ஹென்ரி நிகோல்ஸுடன் அனுபவ வீரர் ரோஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக ஆடிய நிகோல்ஸ், களத்தில் நிலைத்த பின்னர் அதிரடியாக ஆடினார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த அவர், பவுண்டரிகளை விளாசி தள்ளினார். அவருடன் இணைந்து டெய்லரும் அதிரடியாக ஆட, நியூசிலாந்தின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 

மூன்றாவது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 62 ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி அருமையாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், இவர்களை இந்திய பவுலர்களால் பிரிக்க முடியவில்லை. பவுலர்களால் இந்த ஜோடியின் விக்கெட்டை வீழ்த்த முடியாத சூழலில், விராட் கோலி தனது அபாரமான ஃபீல்டிங்கின் மூலம் இந்த ஜோடியை பிரித்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். 

பும்ரா வீசிய 29வது ஓவரின் மூன்றாவது பந்தை டெய்லர் அடிக்க, பிட்ச்சுக்கு பக்கத்திலேயே பந்து கிடந்தது. ஆனால் அதற்கு நிகோல்ஸும் டெய்லரும் ரன் ஓடினர். மின்னல் வேகத்தில் வேகமாக ஓடிவந்து பந்தை எடுத்து ஸ்டம்பில் அடித்தார் கோலி. 82 பந்தில் 11 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் அடித்திருந்த நிகோல்ஸ் ரன் அவுட். நல்ல ஃப்ளோவில் போய்க்கொண்டிருந்த நியூசிலாந்து அணிக்கு, இந்த விக்கெட் வேகத்தடையாக அமைந்துள்ளது. டெய்லருடன் கேப்டன் டாம் லேதம் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார்.