வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ஆடாமல் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் பயோ பபுளிலிருந்து வெளியேறியுள்ளனர்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று 2-0 என இந்திய அணி டி20 தொடரை வென்றுவிட்டது. கடைசி டி20 போட்டி நாளை(பிப்ரவரி 20) கொல்கத்தா ஈடன் கார்டனில் நடக்கவுள்ளது.
அதைத்தொடர்ந்து வரும் 24ம் தேதி முதல் இலங்கைக்கு எதிரான டி20 தொடர் ஆரம்பிக்கிறது. பிப்ரவரி 24, 26 மற்றும் 27 ஆகிய 3 தேதிகளிலும் 3 டி20 போட்டிகளும், அதைத்தொடர்ந்து 2 டெஸ்ட் போட்டிகளும் நடக்கவுள்ளன.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் நாளை ஆடிவிட்டு, அங்கிருந்து நேரடியாக இந்திய அணி, இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி நடக்கவுள்ள லக்னோவிற்கு செல்கிறது.
இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஜடேஜா மீண்டும் கம்பேக் கொடுக்கிறார். அதற்காக அவர் ஏற்கனவே லக்னோ சென்றுவிட்டார். இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்படும் என்று ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி டி20 போட்டியிலேயே விராட் கோலி ஆடவில்லை. முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி டி20 தொடரை வென்றுவிட்டதால், கடைசி போட்டியில் விராட் கோலியின் சேவை தேவையில்லை என்பதால், இந்த போட்டியிலிருந்தே அவர் ஓய்வு எடுக்கிறார்.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ஆடாமல், இந்திய அணியின் பயோ பபுளிலிருந்து வேளியேறி, கொல்கத்தாவிலிருந்து மும்பைக்கு சென்றுவிட்டார் விராட் கோலி. ரிஷப் பண்ட்டும் பயோ பபுளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கோலி அடுத்ததாக நடக்கவுள்ள இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஆடமாட்டார். அதேபோல ரிஷப் பண்ட்டும் ஆடமாட்டார் என்று தெரிகிறது.
டி20 தொடர் முடிந்து மொஹாலியில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் இருவரும் இந்திய அணியில் இணைவார்கள் என்று தெரிகிறது. அதில் கோலி ஆடினால் அது அவரது 100வது சர்வதேச டெஸ்ட் போட்டியாக இருக்கும். அப்படி இல்லையெனில் அடுத்ததாக பெங்களூருவில் நடக்கும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் அவரது 100வது டெஸ்ட்டாக அமையும்.
