இந்தியா - இலங்கை இடையேயான முதல் டி20 போட்டி மழையால் ரத்தான நிலையில், இரண்டாவது போட்டி இந்தூரில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 20 ஓவரில் 142 ரன்கள் அடித்தது. 143 ரன்கள் என்ற இலக்கை 18வது ஓவரிலேயே எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

எளிய இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ராகுலும் தவானும் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ராகுல் அதிரடியாக ஆடி விரைவில் ஸ்கோர் செய்ய, அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடினார் தவான். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 71 ரன்களை சேர்த்தனர். ராகுல் 32 பந்தில் 45 ரன்கள் அடித்து ஆட்டமிழந்ததை அடுத்து, மூன்றாம் வரிசையில் பேட்டிங் ஆடவந்த ஷ்ரேயாஸ் ஐயர், சிறப்பாக ஆடினார். 

ஷ்ரேயாஸ் ஐயர் 26 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 34 ரன்களை அடித்து, அணியின் வெற்றிக்கு வெறும் 6 ரன்கள் தேவைப்பட்டபோது ஆட்டமிழந்தார். கோலியும் ஷ்ரேயாஸ் ஐயரும் இணைந்து நன்றாக ஆடினர். ஷ்ரேயாஸ் ஐயர் இந்த போட்டியில் ஒரு சிக்ஸர் தான் அடித்தார். ஆனால் ஒரு சிக்ஸரும் முரட்டு சிக்ஸர். 

ஹசரங்கா வீசிய 16வது ஓவரில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரை விளாசினார் ஷ்ரேயாஸ் ஐயர். அந்த ஓவரில் மட்டும் 17 ரன்கள் அடிக்கப்பட்டது. அந்த ஓவரின் கடைசி பந்தை ஃபுல் லெந்த்தாக வீசினார் ஹசரங்கா. சற்று லெக் திசையில் விலகி, லாங் ஆனில் தூக்கியடித்தார் ஷ்ரேயாஸ் ஐயர். ஷ்ரேயாஸ் அடித்த பந்து, நல்ல உயரம் மற்றும் நல்ல தூரத்திற்கு சென்றது. கிட்டத்தட்ட ஸ்டேடியத்திற்கு வெளியே சென்றது. ஸ்டேடியத்தின் மேற்கூரை மேல் சென்று அடித்து கீழே விழுந்தது.

அந்த ஷாட்டை கண்டு வியந்த விராட் கோலி, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் வில்லியம்ஸின் பந்தில் தான் அடித்த சிக்ஸருக்கு கொடுத்த ரியாக்‌ஷனை கொடுத்தார். வாவ்.. என்று கோலி வியந்து பார்க்க, ஷ்ரேயாஸ் ஐயரும் அவரது ரியாக்‌ஷனை பிரதிபலித்தார். பிசிசிஐ அந்த வீடியோவை பதிவேற்றியுள்ளது. அந்த வீடியோ இதோ..