சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி சாதனைகளை குவித்துவரும் நிலையில், ரோஹித் சர்மாவும் அவருக்கு நிகராக சாதனைகளை குவித்து அசாத்திய மைல்கற்களை செட் செய்துவருகிறார். 

இந்நிலையில், டி20 கிரிக்கெட்டில் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிகமான ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் இருவரும் டாப் 2 இடங்களில் மாறி மாறி வருகின்றனர். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, ரோஹித் சர்மா 2547 ரன்களையும் கோலி 2544 ரன்களையும் குவித்திருந்தனர். ரோஹித்தை விட கோலி வெறும் 3 ரன்கள் மட்டுமே பின் தங்கியிருந்தார். 

திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த இரண்டாவது டி20 போட்டியில் இருவருமே ஆடிய நிலையில், முதலிடம் குறித்த எதிர்பார்ப்பு எகிறியது. ஆனால் இந்த போட்டியில் இருவருமே சரியாக ஆடவில்லை. ரோஹித் சர்மா 15 ரன்களிலும் விராட் கோலி 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஏற்கனவே 3 ரன்கள் மட்டுமே ரோஹித்தை விட பின் தங்கியிருந்த கோலி, இந்த போட்டியில் அவரைவிட 4 ரன்கள் கூடுதலாக அடித்ததன் மூலம் ரோஹித்தை விட ஒரு ரன் முன்னிலையில் முதலிடத்தில் உள்ளார். இது வெறும் தற்காலிகம் தான். இருவருமே டி20 கிரிக்கெட்டில் ஆடிவருவதால், இன்னும் சில ஆண்டுகள் ஆடுவார்கள் என்பதால், இருவருக்கும் இடையே கடும் போட்டி தொடர்ந்து நிலவும். இருவரும் மாறி மாறி முதலிடத்தை பிடிப்பது தொடரும்..