இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் விராட் கோலி வெறும் 14 ரன்கள் அடித்தால், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு கேப்டனாக புதிய மைல்கல்லை எட்டுவார்.
சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் முதன்மையானவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் பேட்டிங் சாதனைகளை ஒவ்வொன்றாக தகர்த்து புதிய மைல்கற்களை எட்டிவருகிறார். சச்சின் டெண்டுல்கரின் பல சாதனைகளை ஏற்கனவே தகர்த்துவிட்ட விராட் கோலி, அவரது அதிக ரன்கள் மற்றும் அதிக சதங்கள் ஆகிய சாதனைகளையும் தகர்த்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தவகையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் புதிய மைல்கல்லை எட்டவுள்ளார் கோலி. குழந்தை பிறக்கவிருந்ததால், ஆஸி.,க்கு எதிரான முதல் டெஸ்ட்டில் மட்டும் ஆடிவிட்டு கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடாமல் இந்தியா திரும்பிய விராட் கோலி, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் மீண்டும் இந்திய அணியை வழிநடத்தவுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் வரும் பிப்ரவரி ஐந்தாம் தேதி சென்னையில் தொடங்குகிறது. அந்த போட்டியில் விராட் கோலி வெறும் 14 ரன்கள் அடித்தால், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு கேப்டனாக அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன்கள் வரிசையில், வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் கிளைவ் லாயிட்டை பின்னுக்குத்தள்ளி 4ம் இடத்தை பிடித்துவிடுவார் கோலி.
டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக 5,220 ரன்கள் அடித்துள்ள கோலி, இன்னும் 14 ரன்கள் அடித்தால் கிளைவ் லாயிட்டை பின்னுக்குத்தள்ளி, 4ம் இடத்தை பிடித்துவிடுவார். இந்த பட்டியலில் முதல் 3 இடங்களில் முறையே க்ரேம் ஸ்மித்(8,659), ஆலன் பார்டர்(6,623), மற்றும் ரிக்கி பாண்டிங்(6,542) ஆகிய மூவரும் உள்ளனர்.
