உலக கோப்பை தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் அரிய சாதனை ஒன்றை படைக்க கிடைத்த வாய்ப்பை விராட் கோலி தவறவிட்டார். 

உலக கோப்பை தொடரில் இந்திய அணி அபாரமாக ஆடிவருகிறது. வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய அணி, அரையிறுதிக்கு தகுதிபெற்றது. இந்திய அணி, ரோஹித், கோலி, பும்ரா ஆகிய மூவரையுமே அதிகமாக சார்ந்திருக்கிறது. அவர்களும் சிறப்பாக ஆடி அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்கின்றனர்.

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக திகழும் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டிவரும் கோலிக்கு வங்கதேச அணிக்கு எதிராகவும் அப்படியொரு அரிய சாதனை படைக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதை கோலி தவறவிட்டார். 

வங்கதேசத்துக்கு எதிரான போட்டிக்கு முன் கோலி தொடர்ச்சியாக 5 அரைசதங்களை அடித்திருந்தார். உலக கோப்பையில் தொடர்ச்சியாக அடிக்கப்பட்ட அரைசதங்கள் 5 தான். தொடர்ச்சியாக 5 அரைசதங்களை அடித்த கோலி, 2015ல் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தின்(தொடர்ச்சியாக 5 அரைசதங்கள்) சாதனையை சமன் செய்திருந்தார். வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்திருந்தால், உலக கோப்பையில் தொடர்ச்சியாக 6 அரைசதங்கள் அடித்த வீரர் என்ற அரிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருப்பார். ஆனால் 26 ரன்களில் ஆட்டமிழந்து அந்த வாய்ப்பை தவறவிட்டார் கோலி.