ஆசிய கோப்பை அணியில் இல்லாவிட்டாலும், அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் சேர்க்கப்படுவதற்காக ரோஹித் மற்றும் கோலி இருவரும் உடற்தகுதித் தேர்வில் கலந்துகொள்ள பிசிசிஐ அறிவுறுத்தியிருந்தது.

இந்திய ஒருநாள் அணி கேப்டன் ரோஹித் சர்மா, டெஸ்ட் அணி கேப்டன் சுப்மன் கில், டி20 அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதித் தேர்வில் கலந்துகொண்டனர். ஆனால், விராட் கோலிக்கு மட்டும் லண்டனில் உடற்தகுதித் தேர்வு நடத்த பிசிசிஐ அனுமதி அளித்ததால் விமர்சனம் எழுந்துள்ளது.

பிட்னஸ் டெஸ்ட்டில் பங்கேற்ற ரோஹித், கில்

ரோஹித், கில் உள்ளிட்ட வீரர்கள் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் உடற்தகுதி மையத்தில் சமீபத்தில் தேர்வில் கலந்துகொண்டனர். ஆசிய கோப்பை அணியில் இல்லாவிட்டாலும், அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் சேர்க்கப்படுவதற்காக ரோஹித் மற்றும் கோலி இருவரும் உடற்தகுதித் தேர்வில் கலந்துகொள்ள பிசிசிஐ அறிவுறுத்தியிருந்தது. இதன்படி, ரோஹித் உள்ளிட்ட வீரர்கள் பெங்களூருவில் உள்ள உடற்தகுதி மையத்தில் தேர்வில் வெற்றிகரமாக பங்கேற்றனர்.

விராட் கோலிக்கு மட்டும் விதிவிலக்கு ஏன்?

வழக்கமான யோ யோ டெஸ்டுடன், இந்த முறை வீரர்களுக்கு பிராங்கோ டெஸ்டையும் பிசிசிஐ நடத்தியது. இந்திய அணியின் மிகவும் உடற்தகுதி வாய்ந்த வீரரான கோலி இந்த டெஸ்டுகளில் எளிதில் தேர்ச்சி பெறுவார் என்பது உறுதி என்றாலும், ஒரு வீரருக்காக மட்டும் விதிமுறைகளில் விலக்கு அளித்தது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. ஜூன் மாதம் நடைபெற்ற ஐபிஎல் தொடருக்குப் பிறகு லண்டன் சென்ற கோலி, பின்னர் இந்தியா திரும்பவில்லை.

கோலி, ரோகித்தின் இலக்கு என்ன?

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது இந்தியாவின் கடைசி போட்டியைப் பார்க்க ரோஹித் மைதானத்திற்கு வந்தார். ஆனால், லண்டனில் இருந்தபோதிலும், இந்தியாவின் போட்டிகளைப் பார்க்க கோலி வரவில்லை. இருப்பினும், கோலி சமீபத்தில் லண்டனில் பேட்டிங் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ வெளியானது. டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற கோலியும் ரோஹித்தும் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுகின்றனர். 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடுவதுதான் கோலி மற்றும் ரோஹித்தின் இலக்கு என்பது குறிப்பிடத்தக்கது.