1970களில் கிளைவ் லாயிட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி, ஸ்டீவ் வாக் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி மற்றும் பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி ஆகிய அணிகள் அந்தந்த காலக்கட்டங்களில் கிரிக்கெட் உலகில் கோலோச்சின. 

இவர்களில் கிளைவ் லாயிட் கேப்டன்சியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 உலக கோப்பைகளை வென்றது. ஸ்டீவ் வாக் கேப்டன்சியில் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகளையும் சாதனைகளையும் குவித்தது. கிளைவ் லாயிட் ஒருநாள் கிரிக்கெட்டிலும் ஸ்டீவ் வாக் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்த நிலையில், ரிக்கி பாண்டிங் டெஸ்ட் மற்றும் ஒருநாள் என இரண்டிலுமே கேப்டன்சியில் அசத்தி வெற்றிகளை குவித்தார். 

டெஸ்ட் கிரிக்கெட்டின் வெற்றிகரமான கேப்டன்களாக ஸ்டீவ் வாக் மற்றும் பாண்டிங் திகழ்கின்றனர். தற்போது இவர்களுடன் விராட் கோலியும் இணைந்துள்ளார். விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகளை குவித்துவருகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்துவரும் டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றுள்ளது. இது இந்தியாவில் இந்திய அணி தொடர்ச்சியாக வெல்லும் 11வது டெஸ்ட் தொடர். இதன்மூலம் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக அதிகமான டெஸ்ட் தொடர்களை வென்ற அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்தது. 

அதுமட்டுமல்லாமல் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டன்சி செய்த 50 போட்டிகளில் 30 வெற்றிகளை பெற்றுள்ளார். இதன்மூலம் 50 டெஸ்ட் போட்டிகளில் அதிகமான வெற்றிகளை பெற்ற கேப்டன்களின் பட்டியலில் ஸ்டீவ் வாக்(37 வெற்றிகள்), பாண்டிங்(35 வெற்றிகள்) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் விராட் கோலி உள்ளார். 

ஸ்டீவ் வாக், பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிகள், அந்தந்த காலக்கட்டத்தில் கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்தின. அந்த வரிசையில் தற்போது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய மண்ணில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் வெற்றிகளை குவித்து ஆதிக்கம் செலுத்திவருகிறது.