சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக வலம்வரும் விராட் கோலி, போட்டிக்கு போட்டி சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். சச்சின் டெண்டுல்கரின் அதிக சதங்கள், அதிக ரன்கள் ஆகிய சாதனைகளை கோலி முறியடித்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்களான கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் வரிசையில் மிகப்பெரிய ஜாம்பவனாக திகழ்கிறார் கோலி. சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடப்படும் கோலி, அவரை போலவே ரன்களை குவித்துவருகிறார். 

சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து இந்திய அணிக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் விராட் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளை குவித்துவருகிறார். அந்த வரிசையில், உலக கோப்பை தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் 57 ரன்கள் அடித்தால் ஒருநாள் கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்களை எட்டிவிடுவார். 

கோலி 57 ரன்கள் அடித்தால், ஒருநாள் கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்களை எட்டிய 8வது சர்வதேச வீரர் ஆவார். இந்தியாவில் சச்சின், கங்குலிக்கு அடுத்து மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். மேலும் விரைவில் 11 ஆயிரம் ரன்களை கடந்த வீரராக இதுவரை சச்சின் திகழ்கிறார். 276 இன்னிங்ஸ்களில் 11 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார் சச்சின். ஆனால் கோலி இன்றைய போட்டியில் 57 ரன்கள் அடித்தால் 222 இன்னிங்ஸ்களில் 11 ஆயிரம் ரன்களை எட்டிவிடுவார். இதன்மூலம் சச்சினின் சாதனை தகர்க்கப்படும். இன்றைய போட்டியில் இல்லாவிட்டாலும் அடுத்த போட்டியில் அடித்தாலும் கூட, சச்சினை விட மிக குறைவான இன்னிங்ஸ்களில் 11 ஆயிரம் எட்டிய வீரர் என்ற சாதனையை கோலி படைப்பார்.