இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஒரு டீமெரிட் புள்ளியும் போட்டி ஊதியத்தில் 25 சதவிகிதம் அபாராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா - ஆஃப்கானிஸ்தான் இடையேயான போட்டி சவுத்தாம்ப்டனில் நடந்தது. இந்த போட்டியில் 224 ரன்கள் அடித்த இந்திய அணி, 213 ரன்களுக்கு ஆஃப்கானிஸ்தான் அணியை சுருட்டி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியின் பேட்டிங்கின்போது, 29வது ஓவரை பும்ரா வீசினார். அந்த ஓவரின் முதல் பந்து ரஹ்மத் ஷாவின் கால்காப்பில் பட்டது. அதற்கு பவுலர் பும்ராவும் கேப்டன் கோலியும் அம்பயர் அலீம் தாரிடம் அப்பீல் செய்தனர். ஆனால் அம்பயர் கொடுக்க மறுத்துவிட்டார். இந்திய அணி 3வது ஓவரிலேயே ரிவியூவை இழந்துவிட்டதால் ரிவியூவும் எடுக்க முடியாது. அதனால் இது அவுட் என்பதில் உறுதியாக இருந்த கேப்டன் கோலி, அம்பயர் அலீம் தாரிடம் ஆக்ரோஷமாக வாதிட்டார். 

ஐசிசி விதிப்படி கள நடுவர்களுடன் வீரர்களோ கேப்டனோ ஆக்ரோஷமாக வாதிடுவது தவறு. எனவே போட்டிக்கு பின்னர், இந்திய கேப்டன் கோலி மீது மூன்றாவது அம்பயரிடம் கள நடுவர்கள் புகார் அளித்தனர். இதுகுறித்த விசாரணையில் அம்பயருடன் வாக்குவாதம் செய்ததை ஒப்புக்கொண்ட கோலி, அபராதத்தை ஏற்பதாக தெரிவித்தார். இதையடுத்து விராட் கோலிக்கு ஒரு டீமெரிட் புள்ளியும் போட்டி ஊதியத்தில் 25 சதவிகிதம் அபராதமும் விதிக்கப்பட்டது. 

2 ஆண்டுகளில் ஒரு வீரர் 4 டீமெரிட் புள்ளிகள் பெற்றால் அவருக்கு 2 ஒருநாள் போட்டிகள் அல்லது 2 டி20 போட்டிகள் அல்லது ஒரு டெஸ்ட் போட்டியில் தடை விதிக்கலாம். விராட் கோலி 2 டீமெரிட் புள்ளிகளை பெற்றுள்ளார். கடந்த ஆண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதற்காக ஏற்கனவே ஒரு டீமெரிட் புள்ளியை பெற்றுள்ளார் கோலி.