இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடந்துவருகிறது. இந்திய நேரப்படி இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. முதல் நாள் ஆட்ட முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் அடித்துள்ளது.

தொடக்க வீரர் பிரித்வி ஷா டக் அவுட்டான நிலையில், மயன்க் அகர்வால் 17 ரன்களுக்கும் புஜாரா 43 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அரைசதம் அடித்த கோலி 74 ரன்களுக்கு ரன் அவுட்டாகி சத வாய்ப்பை இழந்தார். ரஹானே 42 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஹனுமா விஹாரி பதினாறு ரன்களுக்கு நடையை கட்டினார்.

இந்த இன்னிங்ஸில் 74 ரன்கள் அடித்ததன் மூலம், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணியின் கேப்டனாக 853 ரன்களை குவித்துள்ளார் கோலி. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 10 டெஸ்ட்  போட்டிகளில் கேப்டன்சி செய்துள்ள கோலி, அந்த 10 போட்டிகளில் 853 ரன்களை குவித்துள்ளார். இதன்மூலம், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன்களை குவித்த இந்திய கேப்டன் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார்.

இதற்கு முன் 1964-1969 வரை இந்திய கேப்டனாக இருந்த மன்சூர் அலி கான், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அடித்திருந்த 829 ரன்கள், தான் ஆஸி.,க்கு எதிராக இந்திய கேப்டன் அடித்த அதிகமான ரன்களாக இருந்தது. தற்போது மன்சூர் அலி கானின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.