IPL 2023: ஐபிஎல் தோல்விக்கு பின் விராட் கோலி உருக்கமான டுவீட்..! விஸ்வாசமான ஆர்சிபி ரசிகர்களுக்கு நன்றி

ஐபிஎல் 16வது சீசனில் ஆர்சிபி அணி தோல்வியை தழுவி கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டு தொடரை விட்டு வெளியேறிய நிலையில், விராட் கோலி ஆர்சிபி ரசிகர்களுக்கு உருக்கத்துடன் நன்றி தெரிவித்துள்ளார்.
 

virat kohli convey his gratitude towards rcb fans after defeat in ipl 2023

ஐபிஎல் 16வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. குஜராத் டைட்டன்ஸ், சிஎஸ்கே, லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேறியுள்ளன. இன்று சென்னையில் நடக்கும் முதல் தகுதிப்போட்டியில் சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. எலிமினேட்டரில் மும்பையும் லக்னோவும் மோதுகின்றன. இறுதிப்போட்டி வரும் 28ம் தேதி அகமதாபாத்தில் நடக்கிறது.

ஐபிஎல்லில் 5 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ், 4 முறை கோப்பையை வென்ற சிஎஸ்கே ஆகிய சாம்பியன் அணிகளுடன், அறிமுக சீசனில் கோப்பையை வென்ற குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கடந்த ஆண்டு அறிமுகமான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் பிளே ஆஃபிற்கு முன்னேறியுள்ளன.

ஐபிஎல் தொடங்கியதிலிருந்து ஆடிவந்தாலும், இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத ஆர்சிபி, டெல்லி கேபிடள்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இந்த சீசனிலும் பிளே ஆஃபிற்கு முன்னேறவில்லை. விராட் கோலி கடைசி 2 லீக் போட்டிகளில் சதமடித்தும் அந்த அணியால் பிளே ஆஃபிற்கு முன்னேற முடியவில்லை.

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல்லில் சதங்களையும் சாதனைகளையும் குவித்து சாதனை மன்னனாக திகழ்கிறார். ஐபிஎல்லில் ஆர்சிபிக்காக 237 போட்டிகளில் ஆடி 7 சதங்களுடன் 7263 ரன்களை குவித்துள்ளார். இந்த சீசனிலும் அவர் ஆர்சிபி அணிக்காக மிகச்சிறந்த பங்களிப்பை செய்திருந்தாலும், ஆர்சிபி அணியால் ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை என்பது மிகப்பெரிய வருத்தமான விஷயம் தான். 

ஆர்சிபி அணி ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை என்றாலும், ஆர்சிபி அணியின் ரசிகர்கள் மற்றும் விராட் கோலியின் ரசிகர்களும் அந்த அணியையும் கோலியையும் விட்டுக்கொடுப்பதில்லை. ஒவ்வொரு சீசனிலும் ஃப்ரெஷ்ஷாக கோலி மீதும் ஆர்சிபி மீதும் நம்பிக்கை வைத்து ஆதரவளித்துவருகின்றனர். ஆர்சிபி ரசிகர்களின் ஆதரவால் நெகிழ்ந்துபோன விராட் கோலி, ஐபிஎல்லில் கடைசிவரை ஆர்சிபி அணிக்காக மட்டுமே ஆடுவேன் என்றும், வேறு அணிக்காக ஆடுவதை நினைத்துக்கூட பார்க்கமுடியாது என்றும் ஏற்கனவே கூறியிருக்கிறார்.

இந்நிலையில், இந்த சீசனிலும் ஆர்சிபி அணி கோப்பையை வெல்ல முடியாமல் ரசிகர்களை ஏமாற்றினாலும், ரசிகர்கள் தொடர்ந்து ஆர்சிபிக்கு ஆதரவளித்துவருகின்றனர். இந்த ஐபிஎல்லில் தோற்றிருந்தாலும், ரசிகர்களின் அன்பு மற்றும் ஆதரவால் நெகிழ்ந்துபோன விராட் கோலி, அடுத்த சீசனில் இன்னும் வலிமையுடன் திரும்ப வரும்வோம் என்றும், விஸ்வாசமான ஆர்சிபி ரசிகர்களுக்கு நன்றி என்றும் விராட் கோலி டுவீட் செய்துள்ளார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios