இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடர் இது என்பதால் உலக கோப்பை அணியில் பரிசீலனையில் இருக்கும் சில வீரர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பளிக்கப்பட உள்ளது. 

முதல் மூன்று போட்டிகளில் அப்படியான வாய்ப்பு எதுவும் யாருக்கும் அளிக்கப்படவில்லை. மூன்று போட்டிகளிலும் ஒரே அணி தான் ஆடியது. அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்திய அணி 2 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. 

நாளை மொஹாலியில் நான்காவது ஒருநாள் போட்டியும் 13ம் தேதி டெல்லியில் கடைசி ஒருநாள் போட்டியும் நடக்க உள்ளது. இந்த தொடரில் இதுவரை வாய்ப்பளிக்கப்படாத ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோருக்கு கடைசி இரண்டு போட்டிகளில் வாய்ப்பளிக்கப்பட உள்ளது. 

இதை மூன்றாவது போட்டிக்கு பிறகு பேசிய கேப்டன் கோலி உறுதி செய்தார். அடுத்த இரண்டு போட்டிகளில் இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி எஞ்சிய இரண்டு போட்டிகளில் தொடக்க வீரர் ஷிகர் தவானுக்கு பதிலாக ராகுல் அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. ரோஹித்தும் ராகுலும் தொடக்க ஜோடியாக களமிறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கடைசி 2 போட்டிகளில் தோனி ஆடாதது உறுதி செய்யப்பட்டிருப்பதால் அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் இணைவார். அதேபோல விஜய் சங்கரின் பேட்டிங் ஆர்டர் புரமோட் செய்யப்பட வாய்ப்புள்ளது. மூன்றாவது போட்டியில் ஷமிக்கு காலில் அடிபட்டது. எனினும் அவர் முழுமையாக 10 ஓவரையும் வீசினார். அவரது முழு உடற்தகுதி அணிக்கு முக்கியம் என்பதால் கடைசி 2 போட்டிகளில் அவருக்கு பதிலாக புவனேஷ்வர் குமார் அணியில் இணைவார். 

தோனிக்கு பதில் ரிஷப் பண்ட் ஆடுவது உறுதி. தவானுக்கு பதில் ராகுல், ஷமிக்கு பதில் புவனேஷ்வர் குமார் ஆகிய இரண்டு மாற்றங்களும் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.