வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில், டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்று தொடர்களிலுமே அந்த அணியை ஒயிட்வாஷ் செய்து, மூன்று தொடர்களையும் வென்று நாடு திரும்பியுள்ள இந்திய அணி, அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுடன் ஆடவுள்ளது. 

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வரும் தென்னாப்பிரிக்க அணி, 3 டி20 போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. முதலில் டி20 போட்டிகளும் அதைத்தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளும் நடக்கவுள்ளன. வரும் 15ம் தேதி(நாளை) முதல் இந்த தொடர் தொடங்குகிறது. 

இதற்கிடையே கடந்த 12ம் தேதி, தோனியுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து ஒரு டுவீட் செய்திருந்தார். அதில், அந்த போட்டி தனது வாழ்வில் என்றுமே மறக்கமுடியாத போட்டி என்றும், அது ஸ்பெஷலான நைட் என்றும் கோலி பதிவிட்டுள்ளார். மேலும் ஃபிட்னெஸ் டெஸ்ட்டின் போது ஓடுவது மாதிரி, அந்த போட்டியில் தன்னை தோனி ஓடவிட்டதாகவும் கோலி பதிவிட்டிருந்தார். 

2016 டி20 உலக கோப்பையில், அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமென்றால் கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோதிய போட்டியில், கோலி அதிரடியாக ஆடி 82 ரன்களை குவித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். ரோஹித் சர்மா, தவான், ரெய்னா ஆகியோர் சோபிக்காத நிலையில், விராட் கோலி தனி ஒரு வீரராக நின்று அபாரமாக ஆடி இந்திய அணியை வெற்றி பெற செய்தார். அந்த போட்டியில் கடைசி ஓவரின் முதல் பந்தில் வின்னிங் ஷாட்டை தோனிதான் அடித்தார். 

அந்த போட்டியில் வென்ற பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் அது. கோலி திடீரென அந்த டுவீட் செய்ததை அடுத்து, தோனியின் ஓய்வு பெறப்போகிறார் என்றும் அதை உணர்த்தும் விதமாகத்தான் கோலி அந்த டுவீட் செய்ததாகவும் ஒரு தகவல் வைரலாக பரவியது. ஆனால் தோனியின் ஓய்வு குறித்த உலாவரும் தகவல்கள் பொய் என்று திட்டவட்டமான விளக்கம் வந்தது. 

இந்நிலையில், கடந்த 12ம் தேதி பெரும் பரபரப்பை கிளப்பிய அந்த டுவீட் குறித்து விளக்கமளித்துள்ள கோலி, நான் வீட்டில் சும்மா இருக்கும்போது, ஃபோட்டோக்களை பதிவிடுவேன். பின்னர் பார்த்தால், அது செய்தி ஆகிவிடுகிறது. எனக்கு இது மிகப்பெரிய பாடம். நான் எந்த கோணத்தில் சிந்திக்கிறேன்.. மற்றவர்கள் அதை எந்த கோணத்தில் பார்க்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள இது நல்ல பாடம். அந்த குறிப்பிட்ட போட்டியை நான் இன்னும் மறக்கவில்லை. அந்த போட்டி குறித்து நான் பேசியதே இல்லை. எனவே அது மறுபடியும் நினைவுக்கு வந்ததால் டுவீட் செய்தேன். எந்த கருத்தையுமே ஒவ்வொருவரும் அவரவர் கோணத்தில் புரிந்துகொண்டு, உண்மை எதுவென ஆராயாமல், அவர்கள் நினைப்பதே உண்மை என்று நினைத்துக்கொள்கின்றனர் என்று கோலி விளக்கமளித்துள்ளார்.