சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக வலம்வரும் விராட் கோலி, போட்டிக்கு போட்டி சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். சச்சின் டெண்டுல்கரின் அதிக சதங்கள், அதிக ரன்கள் ஆகிய சாதனைகளை கோலி முறியடித்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்களான கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் வரிசையில் மிகப்பெரிய ஜாம்பவனாக திகழ்கிறார் கோலி. சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடப்படும் கோலி, அவரை போலவே ரன்களை குவித்துவருகிறார். 

சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து இந்திய அணிக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் விராட் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளை குவித்துவருகிறார். அந்த வரிசையில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் மற்றொரு சாதனையை முறியடித்துள்ளார் விராட் கோலி. 

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித்தும் ராகுலும் அபாரமாக ஆடினர். ராகுல் அரைசதம் அடித்து அவுட்டானார். ஆனால் ரோஹித் சர்மா வழக்கம்போல தனது இன்னிங்ஸை பெரிதாக மாற்றினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 24வது சதத்தை அடித்த ரோஹித், 140 ரன்கள் குவித்தார். ரோஹித், கோலி, ராகுல் ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கால் இந்திய அணி 336 ரன்களை குவித்தது. 337 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணியை, 40 ஓவரில் 212 ரன்களுக்கு சுருட்டி டி.எல்.எஸ் முறைப்படி 89 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.

இந்த போட்டியில் வழக்கம்போலவே சிறப்பாக ஆடிய விராட் கோலி, 77 ரன்களை குவித்தார். அவர் 57 ரன்களை கடந்த போது ஒருநாள் கிரிக்கெட்டில் 11000 ரன்களை எட்டினார். இதன்மூலம் மிகக்குறைந்த இன்னிங்ஸ்களில் 11 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். விராட் கோலி வெறும் 222 ஒருநாள் இன்னிங்ஸ்களில் 11 ஆயிரம் ரன்களை அடித்துவிட்டார். 

இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் தான் விரைவில் 11 ஆயிரம் ரன்களை அடித்த வீரராக இருந்தார். அவர் 276 இன்னிங்ஸ்களில் 11 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். சச்சினுக்கு அடுத்தடுத்த இடங்களில் பாண்டிங் மற்றும் கங்குலி உள்ளனர். பாண்டிங் 286 இன்னிங்ஸ்களில் கங்குலி 288 இன்னிங்ஸ்களிலும் 11 ஆயிரம் என்ற மைல்கல்லை எட்டினர். 

சச்சின் டெண்டுல்கரின் அதிவேக 11 ஆயிரம் ரன்கள் என்ற சாதனையையும் விராட் கோலி முறியடித்துள்ளார்.