வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், தனது ஒருநாள் கெரியரில் மற்றுமொரு சதத்தை பதிவு செய்த கோலி, பல சாதனைகளை படைத்துள்ளார். 

விராட் கோலி - ரோஹித் சர்மா ஆகிய இருவரும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். விராட் கோலி சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக வலம்வருவதோடு மட்டுமல்லாமல், சர்வதேச கிரிக்கெட்டில் பேட்டிங்கில் புதிய மைல்கற்களை எட்டிவருகிறார். 

சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் கோலி, ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு பேட்டிங் சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை செட் செய்துவருகிறார். ரோஹித் சர்மாவும் ஒருநாள் கிரிக்கெட்டில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்.

ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்களை விளாசி தனித்தன்மை வாய்ந்த கடினமான சாதனையை தன்னகத்தே கொண்டுள்ளார் ரோஹித் சர்மா. ஒருநாள் கிரிக்கெட்டின் எப்பேர்ப்பட்ட சாதனைகள் முறியடிக்கப்பட்டாலும் ரோஹித்தின் இந்த சாதனையை முறியடிப்பது கடினம். இருவருமே ஒருநாள் கிரிக்கெட்டில் போட்டி போட்டு ஆடிவருகின்றனர். 

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதமடித்த விராட் கோலி, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 2032 ரன்களை குவித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அதிக ரன்களை குவித்த வீரராக கோலி திகழ்கிறார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஜாவேத் மியான்தத்திடமிருந்து இந்த சாதனையை நேற்றைய போட்டியில் தான் முறியடித்தார் கோலி. 

அதுமட்டுமல்லாமல் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவில் 2000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் இந்த சாதனை ரோஹித் சர்மா வசமிருந்தது. ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 37 இன்னிங்ஸ்களில் 2000 ரன்களை அடித்திருந்தார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 34 இன்னிங்ஸ்களில் 2000 ரன்களை கடந்து ரோஹித்தின் சாதனையை முறியடித்துள்ளார் விராட் கோலி.