கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு தனது ஆதரவு 100% இருக்கும் என்று விராட் கோலி உறுதியளித்திருக்கிறார். 

டி20 உலக கோப்பையுடன் இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகினார் விராட் கோலி. வெள்ளைப்பந்து கிரிக்கெட் போட்டிகளுக்கான அணிகளுக்கு வெவ்வேறு கேப்டன்களை நியமிக்கமுடியாது என்று கூறி ஒருநாள் அணிக்கான கேப்டன்சியிலிருந்தும் கோலியை நீக்கிவிட்டு ரோஹித்தையே கேப்டனாக நியமித்தது பிசிசிஐ.

ஆனால் ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து விலக விரும்பாத விராட் கோலி, கேப்டன்சியிலிருந்து விலக மறுத்ததால், பிசிசிஐ அவரை வலுக்கட்டாயமாக நீக்கிவிட்டு ரோஹித்தை நியமித்ததாக தகவல் வெளியானது. அதனால் பிசிசிஐ மீது கோலி அதிருப்தியில் இருப்பதாகவும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் கேப்டன்சியில் ஆட விரும்பாமல், அந்த தொடரிலிருந்து மகளின் பிறந்தநாளை காரணம் காட்டி விலக்கு கேட்டதாகவும் தகவல் வெளியானது.

கோலி ஒருநாள் தொடரில் விலக்கு கேட்டதாக வெளியான தகவல், ரோஹித் - கோலி இடையே மோதல் என்ற சர்ச்சைக்கு உரமூட்டியது. ரோஹித் சர்மா காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய நிலையில், கோலி ஒருநாள் தொடரில் ரோஹித்தின் கேப்டன்சியில் ஆடாமல் விலகுகிறார் என்று பேசப்பட்டது. ரோஹித் சர்மா - விராட் கோலி இடையே மோதல் முற்றியதாக பேசப்பட்டது.

ஆனால் அதுமாதிரியான பேச்சுகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விராட் கோலி. நாளை இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு புறப்படவுள்ள நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த விராட் கோலி, இந்திய அணியை சரியான வழியில் கொண்டுசெல்வது என்னுடைய பொறுப்பு. நான் கேப்டனாவதற்கு முன் என்ன செய்தேனோ, அதையே தான் இப்போதும் செய்யவுள்ளேன். என்னுடைய மனநிலையில் எந்த மாற்றமும் இல்லை. வியூகங்கள் வகுப்பதில் ரோஹித் மிகச்சிறந்த கேப்டன். இந்திய அணியை வழிநடத்தியபோதும், ஐபிஎல்லிலும் அதை நாம் பார்த்திருக்கிறோம். 

ராகுல் Bhai மிக மிக நடுநிலையான கோச்; சிறந்த நிர்வாகி. ராகுல் பாய் மற்றும் ரோஹித் ஆகிய இருவருக்கும் எனது ஆதரவு 100 சதவிகிதம் இருக்கும் என்று விராட் கோலி உறுதியளித்திருக்கிறார்.