Asianet News TamilAsianet News Tamil

உங்களை பற்றி எங்களுக்கு தெரியும்.. உங்ககூட நாங்க இருக்கோம்.. டிவில்லியர்ஸுக்கு தோள் கொடுத்த கோலி, யுவராஜ்

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் வீரருமான ஜாம்பவான் டிவில்லியர்ஸுக்கு ஆதரவாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர். 

virat kohli and yuvraj singh backs ab de villiers
Author
England, First Published Jul 13, 2019, 4:20 PM IST

நடப்பு உலக கோப்பை தொடர் பெரிய அணிகளில் தென்னாப்பிரிக்காவுக்குத்தான் மரண அடியாக இருந்தது. அந்த அணி ஆஃப்கானிஸ்தான், இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளை மட்டுமே வீழ்த்தியது. மற்ற போட்டிகளில் தோற்று லீக் சுற்றிலேயே தொடரை விட்டு வெளியேறியது. 

தென்னாப்பிரிக்க அணி, உலக கோப்பையை மோசமாக தொடங்கியது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் தோற்ற தென்னாப்பிரிக்கா, அதன்பின்னர் வங்கதேசம் மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு எதிராகவும்தோற்றது. இந்தியாவுக்கு எதிரான தோல்வியை அடுத்து டிவில்லியர்ஸ் குறித்த தகவல் ஒன்று வைரலாக பரவி ரசிகர்கள் மத்தியில் அவர் மீதான மதிப்பை காலி செய்தது. 

virat kohli and yuvraj singh backs ab de villiers

கடந்த ஆண்டு டிவில்லியர்ஸ் ஓய்வு அறிவித்த நிலையில், ஐபிஎல் போன்ற லீக் போட்டிகளில் மட்டுமே ஆடிவருகிறார். இந்நிலையில், உலக கோப்பை அணி அறிவிப்பதற்கு முன்பாக டிவில்லியர்ஸ் திடீரென உலக கோப்பை அணியில் ஆட விரும்புவதாக கேப்டன் டுபிளெசிஸ் மூலமாக கோரிக்கை விடுத்ததாகவும், ஆனால் ஓராண்டாக அவர் ஆடாததால் அவரை அணியில் எடுக்க முடியாது என்று மறுத்துவிட்டதாகவும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்த தகவலை கேப்டன் டுப்ளெசிஸும் உறுதிப்படுத்தினார்.

ஏற்கனவே உலக கோப்பைக்கு ஓராண்டு இருக்க ஓய்வு அறிவித்ததால் டிவில்லியர்ஸ் ரசிகர்கள் சிலரால் தூற்றப்பட்டார். அதாவது நாட்டுக்காக ஆடுவதை விட பணத்திற்காக ஐபிஎல் போன்ற லீக் தொடர்களில் ஆடுவது முக்கியமாக போச்சா? பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று டிவில்லியர்ஸ் விமர்சிக்கப்பட்டார். 

virat kohli and yuvraj singh backs ab de villiers

ஏற்கனவே வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் விதமாக உலக கோப்பை அணியில் கடைசி நேரத்தில் இணைய விரும்பினார் டிவில்லியர்ஸ் என்ற தகவல், அவர் மீதான விமர்சனத்தை அதிகரித்தது. டிவில்லியர்ஸ் சுயநலவாதி என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டார். 

இந்நிலையில், தற்போது தன் மீதான விமர்சனங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் பதிலடி கொடுத்ததோடு அணியில் இணைய விரும்பியது குறித்து விளக்கமும் அளித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டிவில்லியர்ஸ், நான் ஓய்வு அறிவித்த பிறகு தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தை சேர்ந்த நபர் ஒருவர்(பெயர் சொல்ல விரும்பவில்லை என்று டிவில்லியர்ஸ் தெரிவித்துவிட்டார்) என்னிடம் உலக கோப்பையில் ஆட விருப்பமுள்ளதா என்று கேட்டார். யார் எது கேட்டாலும் உடனே மறுக்காதவன் நான். அதனால் ஆம் என்று சொல்லிவிட்டேன். அப்படியென்றால் கேப்டன் டுப்ளெசிஸிடம் கேட்டுப்பாருங்கள் என்றார். 

virat kohli and yuvraj singh backs ab de villiers

நானும் டுப்ளெசிஸும் பள்ளிப்பருவத்திலிருந்தே நண்பர்கள். நானும் அவரிடம், ஐபிஎல்லில் நன்றாக ஆடி நல்ல ஃபார்மில் உள்ளேன். உலக கோப்பை அணிக்கு நான் வேண்டுமென்றால் என்னை எடுங்கள். நான் ஆட தயாராக இருக்கிறேன் என்றேன். வேண்டுமென்றால் எடுங்கள் என்று சொன்னேனே தவிர, நான் ஆட விரும்புகிறேன் என்று சொல்லவில்லை. இந்த தகவல் என்னாலோ டுப்ளெசிஸாலோ வெளிவந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் தென்னாப்பிரிக்க அணியின் தோல்வியை திசைதிருப்பும் விதமாகவோ, அதற்கு காரணம் கற்பிக்கும் விதமாகவோ தான் தனிப்பட்ட முறையில் நடந்த உரையாடலை வெளிவிட்டுள்ளனர். அந்த நபர் அப்போது கேட்டபோதே நான் மறுத்திருக்க வேண்டும் என்று இப்போது நினைக்கிறேன். 

virat kohli and yuvraj singh backs ab de villiers

அதுமட்டுமல்லாமல் பணத்திற்காக நான், ஓய்வு அறிவித்துவிட்டு லீக் போட்டிகளில் ஆடுவதாக விமர்சிக்கிறார்கள். ஆனால் என் குடும்பத்துடன் நிறைய நேரம் செலவிட விரும்பியே நான் ஓய்வு அறிவித்தேன். எனக்கு அதிகமான தொகை கொடுத்து ஆடவைக்க, எத்தனையோ லீக் தொடர்களில் இருந்து அணுகினார்கள். ஆனால் நான் அனைத்திலும் ஆடவில்லை. குறிப்பிட்ட சில தொடர்களில் மட்டுமே ஆடுகிறேன் என்று தன்னிலை விளக்கமளித்துள்ளார். 

virat kohli and yuvraj singh backs ab de villiers

இதைக்கண்ட இந்திய அணியின் கேப்டனும் டிவில்லியர்ஸ் ஐபிஎல்லில் ஆடும் ஆர்சிபி அணியின் கேப்டனுமான விராட் கோலி, டிவில்லியர்ஸுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள விராட் கோலி, என் சகோதரரே.. எனக்கு தெரிந்தவரை நீங்கள் மிகவும் நேர்மையானவர். அணிக்காக உண்மையாகவும் உருக்கமாகவும் விளையாடியவர். உங்களுக்கு இதுபோன்று நடந்திருக்கக்கூடாது. உங்களை நாங்கள் நம்புகிறோம். என்றும் உங்களுக்கு துணை நிற்போம். உங்களது அந்தரங்க வாழ்க்கையில் சிலர் நுழைந்து சிக்கலை ஏற்படுத்தியிருப்பது வேதனைக்குரியது. நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்கு அதிக அன்பை கொடுங்கள். நானும் அனுஷ்காவும் உங்களுக்காக எப்போதும் துணை நிற்போம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். 

virat kohli and yuvraj singh backs ab de villiers

அதேபோல யுவராஜ் சிங்கும் டிவில்லியர்ஸுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள யுவராஜ் சிங், என் நண்பரே.. எனக்கு தெரிந்தவரை மிகச்சிறந்த வீரர்களில் நீங்களும் ஒருவர். நல்ல குண நலன்களை கொண்டவர். நீங்கள் இல்லாமல் தென்னாப்பிரிக்க அணிக்கு உலக கோப்பையில் வெற்றி இல்லை. நீங்கள் ஆடாதது உங்கள் நாட்டுக்குத்தான் இழப்பே தவிர, அணியில் இடம்பெறாத உங்களுக்கு எந்த இழப்பும் அல்ல. மிகவும் நல்ல மனிதர். ஆனால் அதிகமாக விமர்சிக்கப்பட்டுவிட்டீர்கள். நீங்கள் ஜெண்டில்மேன் என்பது அனைவருக்கும் தெரியும் என்று யுவராஜ் சிங், டிவில்லியர்ஸுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios