உலக கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக ஆடிவருகிறது. இதுவரை 5 போட்டிகளில் ஆடி 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாமிடத்தில் உள்ளது.

உலக கோப்பையின் அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறுவது உறுதியாகிவிட்டது. உலக கோப்பைக்கு பின்னர் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆட உள்ளது. 

ஆகஸ்ட் 3ம் தேதி இந்த தொடர் தொடங்குகிறது. உலக கோப்பை ஜூலை 14ம் தேதி முடிவடைகிறது.  உலக கோப்பை முடிந்து சில நாட்களிலேயே வெஸ்ட் இண்டீஸிற்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. எனவே உலக கோப்பையில் ஆடிய சில வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட வாய்ப்புள்ளது. 

ஆஸ்திரேலிய தொடரிலிருந்து தொடர்ச்சியாக ஆடிவரும் கேப்டன் விராட் கோலி மற்றும் பும்ரா ஆகியோருக்கு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ஓய்வளிக்கப்பட உள்ளதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. டெஸ்ட் தொடருக்கான அணியில் இருவரும் இணைந்துவிடுவர் என்று தெரிகிறது.