Asianet News TamilAsianet News Tamil

#ENGvsIND 2வது டெஸ்ட்: கோலியும் காலி.. முடிஞ்சுது சோலி..!

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் ரோஹித் மற்றும் ராகுலை தொடர்ந்து கோலியும் 20 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்ததால் இந்திய அணி பெரும் சிக்கலில் உள்ளது.
 

virat kohli also out for just 20 runs in second innings of second test and so india is in big trouble against england
Author
London, First Published Aug 15, 2021, 5:53 PM IST

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, ரோஹித் சர்மா(83) மற்றும் கேஎல் ராகுல்(129) ஆகிய இருவரின் அபாரமான பேட்டிங் மற்றும் கோலி(42), ஜடேஜா(40), ரிஷப் பண்ட் ஆகியோரின் பங்களிப்பால் முதல் இன்னிங்ஸில் 364 ரன்கள் அடித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, ஜோ ரூட்டின் அபாரமான சதத்தால்(180*) முதல் இன்னிங்ஸில் 391 ரன்களை குவித்தது. இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் முடிந்ததோடு, 3ம் நாள் ஆட்டம் முடிந்தது.

27 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை 4ம் நாளான இன்றைய ஆட்டத்தில் தொடங்கியது இந்திய அணி. நல்ல இன்னிங்ஸை ஆடி, மீண்டுமொரு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுக்க வேண்டிய முக்கியமான பொறுப்புடன் களத்திற்கு வந்தனர் ரோஹித்தும் ராகுலும்.

9 ஓவர்கள் இருவரும் தாக்குப்பிடித்து ஆடிய நிலையில், மார்க் உட் வீசிய 10வது ஓவரில் 5 ரன்னுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார் கேஎல் ராகுல். முதல் இன்னிங்ஸில் சதமடித்த கேஎல் ராகுல், இந்த இன்னிங்ஸில் 5 ரன்னுக்கு வெளியேறி ஏமாற்றமளித்தார்.

இதையடுத்து மார்க் உட், அவரது அடுத்த ஓவரில்(12வது ஓவர்) ரோஹித்தை பக்காவாக பிளான் செய்து வீழ்த்தினார். ஷார்ட் பிட்ச் பந்து வீசினால் ரோஹித் சர்மா கண்டிப்பாக புல் ஷாட் ஆடுவார் என்பதால், டீப் ஃபைன் லெக் திசையில் ஃபீல்டரை நிறுத்திவிட்டு, ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசினார் மார்க் உட். 12வது ஓவரின் 3வது பந்தை சிக்ஸர் விளாசிய ரோஹித், அந்த ஓவரின் கடைசி பந்தையும் புல் ஷாட் ஆடமுயன்று மொயின் அலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

முக்கியமான இன்னிங்ஸில் நல்ல ஃபார்மில் இருந்த ரோஹித்தும் ராகுலும் விரைவில் ஆட்டமிழந்தது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு.

அதன்பின்னர் சிறப்பாக ஆடி பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டிய கட்டாயத்தில் இருந்த விராட் கோலி, 4 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் அடித்த நிலையில் சாம் கரனின் பந்தில் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ரோஹித் மற்றும் ராகுலை தொடர்ந்து விராட் கோலியும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது இந்திய அணிக்கு பெரும் சிக்கலாக அமைந்துள்ளது.

நல்ல ஃபார்மில் இருந்த ரோஹித், ராகுலுடன், அணியின் முக்கியமான வீரரான கோலியும் விரைவில் ஆட்டமிழந்தது இந்திய அணிக்கு உண்மையாகவே பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. புஜாரா, ரஹானே ஆகிய இருவரும் ஆடிவருகின்றனர். இருவருமே சீனியர் வீரர்கள் தான் என்றாலும், அவர்கள் ஃபார்மில் இல்லை. ஆனால் இக்கட்டான நிலையில் இருக்கும் இந்திய அணியை காப்பாற்ற அவர்கள் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து பொறுப்புடன் பெரிய இன்னிங்ஸ் ஆடியாக வேண்டும். 

இவர்களும் சொதப்பும்பட்சத்தில் பின்வரிசையில் ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரின் மீது முழு பொறுப்பும் இறங்கும். இந்திய அணி 4ம் நாளான இன்றைய ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை 25 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் அடித்துள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios