உலக கோப்பை தொடரில் இந்திய அணி அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்துவருகிறது. எதிரணிகளின் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடிவருகிறது. வங்கதேசத்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, அரையிறுதிக்கு தகுதிபெற்றுவிட்டது. 

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையே பர்மிங்காமில் நேற்று நடந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ரோஹித் சர்மாவின் அதிரடி சதம், ராகுலின் பொறுப்பான அரைசதம் மற்றும் மற்ற வீரர்களின் பங்களிப்பின் காரணமாக 50 ஓவர் முடிவில் 314 ரன்களை குவித்தது. 315 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியை 286 ரன்களுக்கு சுருட்டி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. 

இந்த போட்டியில் வங்கதேச அணியின் பேட்டிங்கின் போது ஷமி வீசிய 11வது ஓவரின் இரண்டாவது பந்து சௌமியா சர்க்காரின் கால்காப்பில் பட்டது. அதற்கு பவுலர் ஷமி, கேப்டன் விராட் கோலி ஆகியோர் அப்பீல் செய்தனர். ஆனால் அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. அந்த நேரத்தில் தோனி டிரெஸிங் ரூம் சென்றுவிட்டதால் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக இருந்தார். அவரிடம் பேச்சுக்கு ஒரு ஆலோசனை கேட்டுவிட்டு, கேப்டன் கோலி ரிவியூ எடுத்தார். 

ரிப்ளேவில் பார்த்து முடிவு செய்வதற்கே மிகவும் கடினமாக இருந்தது. பந்து பேட் மற்றும் கால்காப்பு ஆகிய இரண்டுக்கும் இடையே சென்றதால் அது முதலில் பேட்டில் பட்டதா கால்காப்பில் பட்டதா என்பதை கண்டுபிடிக்க கடினமாக இருந்தது. அதனால் பந்து ஸ்டம்பில் பட்டதா என்பதை பார்ப்பதற்கான பால் டிரேக்கிங்கே செய்யாமல், கள நடுவரின் முடிவே இறுதியானது என்று தேர்டு அம்பயர் சொல்லிவிட்டார். 

தேர்டு அம்பயர் பால் ட்ரேக்கிங் செய்துவிட்டு கள நடுவரின் முடிவு இறுதியானது என்று கூறியிருந்தால் இந்திய அணியின் ரிவியூ இழக்கப்பட்டிருக்காது. ஆனால் பால் ட்ரேக்கிங் செய்யாததால் இந்திய அணி ரிவியூவை இழந்தது. இதையடுத்து ரிவியூவை இழந்த கடுப்பில் பால் ட்ரேக்கிங் செய்யாதது குறித்து கள நடுவரிடம் முறையிட்டார் கேப்டன் கோலி. சிறிது நேரம் வாதிட்டு போராடினார் கோலி. ஆனால் அந்த வாதத்தால் எந்த பயனும் இல்லை. 

கள நடுவர்களிடம் களத்தில் வீரர்கள் வாதம் செய்யக்கூடாது என்பது ஐசிசி விதி. ஆனால் ஏற்கனவே 2 டீமெரிட் புள்ளிகளை பெற்றுள்ள கோலி, மீண்டும் அம்பயரிடம் வாதிட்டுள்ளார். இரண்டு ஆண்டுகளில் நான்கு டீமெரிட் புள்ளிகளை பெற்றால் அந்த வீரருக்கு 2 ஒருநாள் போட்டிகள் அல்லது 2 டி20 போட்டிகளில் தடை விதிக்க முடியும். அந்த வகையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ஏற்கனவே 2 புள்ளிகளை பெற்றுள்ள கோலி, மீண்டும் அம்பயருடன் வாக்குவாதம் செய்துள்ளார். 

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அம்பயரிடம் வாக்குவாதம் செய்ததால் 25 சதவிகிதம் அபராதம் மற்றும் ஒரு டீமெரிட் புள்ளி கோலிக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், அந்த சம்பவம் நடந்ததற்கு பின்னர் அதற்கடுத்த இரண்டாவது போட்டியிலேயே கோலி மீண்டும் அம்பயருடன் வாக்குவாதம் செய்துள்ளார்.