இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் ஆகிய இரண்டிலும், 10 ஆயிரத்துக்கு அதிகமான ரன்களை குவித்தவர். 

தனது கெரியரில் ஒரு இன்னிங்ஸை கூட சுயநலமாக ஆடாத, அணியின் நலன் மற்றும் வெற்றியை மட்டுமே கருத்தில் கொண்டு ஆடிய வீரர் ராகுல் டிராவிட். கிரிக்கெட் வீரராக இந்திய அணிக்கு மிகப்பெரிய பங்களிப்பு செய்த ராகுல் டிராவிட், ஓய்வுக்கு பிறகு, அண்டர் 19 மற்றும் இந்தியா ஏ அணிகளின் தலைமை பயிற்சியாளராக இருந்து பல திறமையான இளம் வீரர்களை இந்திய அணிக்கு உருவாக்கி கொடுத்தார். 

தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருக்கிறார். இந்நிலையில், ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க விரும்பாததால் தான், அதன்பின்னர் ரவி சாஸ்திரி பயிற்சியாளரானதாக பிசிசிஐ நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார். 

2017ம் ஆண்டின் மத்தியில் அனில் கும்ப்ளேவிற்கு பிறகு, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி பொறுப்பேற்றார். ராகுல் டிராவிட் வேண்டாமென்று முடிவெடுத்ததால் தான் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட்டார்.

அதுகுறித்து ஆங்கில ஸ்போர்ட்ஸ் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் பேசிய வினோத் ராய், அனில் கும்ப்ளேவிற்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிற்கு ராகுல் டிராவிட்டைத்தான் நாங்கள் நினைத்தோம். அவரிடம் இதுகுறித்து பேசியபோது, நான் கடந்த பல ஆண்டுகளாக, கிரிக்கெட்டுக்காக வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு கொண்டே இருக்கிறேன். அதனால் எனது குடும்பத்துடன் நேரம் செலவிட முடியவில்லை. 2 வளர்ந்துவரும் பசங்க இருக்காங்க.. எனவே என் குடும்பத்திற்காகவும் நேரம் செலவழிக்க விரும்புகிறேன். எனவே என்னால் முடியாது என்று ராகுல் டிராவிட் சொல்லிவிட்டார். அவரது எண்ணமும் கருத்தும் சரியானதுதான். அதன்பின்னர் தான் ரவி சாஸ்திரி தலைமை பயிற்சியாளர் ஆனார். 

டிராவிட், சாஸ்திரி, கும்ப்ளே ஆகிய மூவருமே சிறந்த பயிற்சியாளர்கள். ராகுல் டிராவிட் அண்டர் 19 அணியின் பயிற்சியாளராக, முழு ஈடுபாட்டுடன் இளம் வீரர்களை இந்திய அணிக்கு உருவாக்கி கொடுத்தார். சரியான திட்டமிடலுடன் அனைத்து வீரர்களையும் சிறப்பாக வழிநடத்தி அருமையான அணியையும் வீரர்களையும் உருவாக்கியதுடன், வெற்றிகளையும் உலக கோப்பையையும் வென்று கொடுத்தார் என்று வினோத் ராய் புகழாரம் சூட்டியுள்ளார்.