தமிழகத்தை சேர்ந்த ஆல்ரவுண்டர் விஜய் சங்கர், கடைசி நேரத்தில் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்து, இங்கிலாந்துக்கு சென்றார். 

உலக கோப்பையில் அசத்தும் கனவுடன் இங்கிலாந்துக்கு சென்ற விஜய் சங்கருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. உலக கோப்பையில் ஆட கிடைத்த சில வாய்ப்புகளிலும் பெரிதாக சோபிக்கவில்லை விஜய் சங்கர். அதேநேரத்தில் படுமோசமாகவும் ஆடவில்லை. ஆனாலும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமளவிற்கு ஆடவில்லை. 

இந்நிலையில், பயிற்சியின்போது பும்ராவின் பந்தில் காலில் அடிபட்டு, காயமடைந்ததால் உலக கோப்பை தொடரிலிருந்து பாதியில் விலகினார். அவருக்கு பதிலாக மயன்க் அகர்வால் அணியில் எடுக்கப்பட்டார். அதன்பின்னர் முழு ஓய்வில் இருந்துவந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகளிலும் ஆடாமல் ஓய்வில் இருந்தார். 

அந்த காயம் சரியாகி முழு உடற்தகுதி பெற்றுவிட்ட நிலையில், விஜய் சங்கர், சேப்பாக் கில்லீஸ் அணியில், தூத்துக்குடி பாட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதன்முறையாக களமிறங்கினார். இந்த போட்டியில் சேப்பாக் கில்லீஸ் அணி முதலில் பேட்டிங் ஆடி வெறும் 127 ரன்கள் மட்டுமே அடித்தது. விஜய் சங்கர் பேட்டிங் சோபிக்கவில்லை. 7 பந்துகள் மட்டுமே ஆடி 3 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். 

ஆனால் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டார். முதல் ஓவரை வீசிய விஜய் சங்கர், முதல் பந்திலேயே ஆகாஷ் சிவனை வீழ்த்தி செம கம்பேக் கொடுத்தார். 3.5 ஓவர்கள் வீசி 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். தூத்துக்குடி பாட்ரியாட்ஸ் அணியை 95 ரன்களில் சுருட்டி சேப்பாக் கில்லீஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.