உலக கோப்பை தொடங்க உள்ள நிலையில், விஜய் சங்கருக்கு பயிற்சியின்போது காயம் ஏற்பட்டிருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

நீண்ட இழுபறியில் இருந்த 4ம் வரிசை வீரருக்கான இடத்திற்கு விஜய் சங்கரையும் மாற்று விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக்கையும் தேர்வு செய்திருந்தது தேர்வுக்குழு. 4ம் வரிசையில் ராயுடு கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கடைசி இரண்டு தொடர்களில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் அசத்தி கடைசி நேரத்தில் உலக கோப்பை அணியில் இடம்பிடித்துவிட்டார் விஜய் சங்கர். அதனால் உலக கோப்பை அணியில் இடம் கிடைக்கும் என்று பெரிதும் நம்பியிருந்த ராயுடுவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

நான்காம் வரிசைக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணி பல வீரர்களை பரிசோதித்தது. ஆனால் கடைசி இரண்டு மாதங்களில் சிறப்பாக ஆடி நான்காம் இடத்தை பிடித்துவிட்டார் விஜய் சங்கர். விஜய் சங்கர் மிடில் ஆர்டரில் நிதானமாக சூழலுக்கு ஏற்றவாறு பேட்டிங் ஆடும் அதேவேளையில், சில பெரிய ஷாட்டுகளையும் ஆடுகிறார். அதுமட்டுமல்லாமல் பவுலிங்கும் வீசுவார் என்பதாலும் ஃபீல்டிங்கும் சிறப்பாக செய்வதாலும் விஜய் சங்கர் அணியில் எடுக்கப்பட்டார். 

விஜய் சங்கர் அல்லது கேஎல் ராகுல் ஆகிய இருவரில் ஒருவர் உலக கோப்பையில் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அணியில் சேர்ந்த உடனேயே உலக கோப்பையில் ஆடும் வாய்ப்பு விஜய் சங்கருக்கு கிடைத்தது. 

தான் புறக்கணிக்கப்பட்டதை அடுத்து விஜய் சங்கரின் தேர்வை ராயுடு நக்கலாக சாடியிருந்தார். ஆனால் விஜய் சங்கருக்கு கேப்டன் கோலியின் ஆதரவு இருந்தது. விஜய் சங்கர் இந்திய அணியில் சிறப்பாக ஆடியுள்ளார். அவரை உலக கோப்பை அணியில் பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று விஜய் சங்கர் இந்திய அணிக்கு கிடைத்த மிகச்சிறந்த வரப்பிரசாதம் என்கிற ரீதியாக விஜய் சங்கரின் தேர்வை கேப்டன் கோலி நியாயப்படுத்தியிருந்தார். 

ஜூன் 5ம் தேதி இந்திய அணி, தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. உலக கோப்பை தொடங்குவதற்கு முன்பாக பயிற்சி போட்டிகள் நடந்துவருகின்றன. அதில் இன்று இந்தியாவும் நியூசிலாந்தும் மோதுகின்றன. 

இதற்கிடையே பயிற்சியில் ஈடுபட்டிருந்த விஜய் சங்கருக்கு கையில் அடிபட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக பயிற்சியை நிறுத்திவிட்டு மைதானத்திலிருந்து சிகிச்சைக்காக சென்றார். அவரது காயம் குறித்த அப்டேட்டுகள் இன்னும் வரவில்லை. பயிற்சி போட்டிகளில் ஆடமுடியவில்லை என்றாலும் ஜூன் 5ம் தேதி தொடங்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் விஜய் சங்கர் ஆடுவாரா? அதற்குள்ளாக தேறிவிடுவாரா? என்ற பல கேள்விகள் உள்ளன. விஜய் சங்கருக்கு காயம் ஏற்பட்டது, இந்திய அணிக்கு கண்டிப்பாக ஒரு பின்னடைவுதான்.