உலக கோப்பையில் ஆடுவதுதான் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் கனவாக இருக்கும். அதற்கு எந்த வீரரும் விதிவிலக்காக இருக்கமுடியாது. அனைவருக்குமே தங்கள் நாட்டு அணிக்காக உலக கோப்பையில் ஆட வேண்டும் என்ற ஆசை இருக்கும். 

சில வீரர்களுக்கு அது இளம் வயதிலேயே கிடைத்துவிடும். சில வீரர்களுக்கு கடைசி வரை கிடைக்கவே கிடைக்காது. கோர் வீரர்களை தவிர மற்ற வீரர்களாக தேர்வு செய்யப்படுபவர்கள், உலக கோப்பை நேரத்தில் நல்ல ஃபார்மில் சிறப்பாக ஆடுவது அவசியம். 

2019 உலக கோப்பைக்காக கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்திய அணியின் நான்காம் வரிசைக்கு ஆள் தேடப்பட்டது. ஷ்ரேயாஸ், ரஹானே, ரெய்னா, மனீஷ் பாண்டே என பல வீரர்களை பரிசோதித்த பிறகு, ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸ் தொடர் ஆகியவற்றில் சிறப்பாக ஆடி, உலக கோப்பையில் நான்காம் இடத்தை கிட்டத்தட்ட உறுதி செய்தவர் ராயுடு. 

ஆனால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த ஆஸ்திரேலிய தொடரில் சரியாக ஆடவில்லை. அதற்கடுத்து நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஒரு போட்டியில் மட்டும் நன்றாக ஆடினார். அதன்பின்னர் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவில் நடந்த தொடரில் சரியாக ஆடவில்லை. ராயுடு ஏமாற்றமளித்த அதேநேரத்தில், கடந்த ஜனவரி மாதம் இந்திய அணியில் அறிமுகமான விஜய் சங்கர், பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 

நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் மிடில் ஆர்டரில் சிறப்பாக பேட்டிங் ஆடி நம்பிக்கையளித்த விஜய் சங்கர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நாக்பூர் ஒருநாள் போட்டியில் கடைசி ஓவரில் அபாரமாக பந்துவீசி இந்திய அணியை திரில் வெற்றி பெற செய்து தனது பவுலிங் திறமையையும் காட்டினார். அதன் விளைவாக உலக கோப்பை அணியிலும் எடுக்கப்பட்டார். 

அணியில் அறிமுகமான மூன்றே மாதங்களில் உலக கோப்பை அணிக்கு ஒரு வீரர் தேர்வானால், காலங்காலமாக போராடி கொண்டிருக்கும் வீரருக்கு கடுப்பு வருவது இயல்புதான். தான் புறக்கணிக்கப்பட்டது குறித்த அதிருப்தியை நக்கலாக டுவீட் செய்து வெளிப்படுத்தியிருந்தார் ராயுடு. ஆனாலும் விஜய் சங்கரின் நடப்பு ஃபார்மின் அடிப்படையிலும் அவர் ஒரு ஆல்ரவுண்டர் என்ற வகையிலும் அவர் எடுக்கப்பட்டதாக தேர்வுக்குழு தலைவரும் கேப்டனும் விஜய் சங்கரின் தேர்வை நியாயப்படுத்தினர். 

அணியில் அறிமுகமான ஒருசில மாதங்களிலேயே உலக கோப்பையில் ஆடும் வாய்ப்பு எல்லாருக்கும் அவ்வளவு எளிதாக கிடைத்துவிடாது. அப்படியான அரிய வாய்ப்பு விஜய் சங்கருக்கு கிடைத்தது. ஆனால், இன்று நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டி நடக்க உள்ள நிலையில், அதற்கு முன்னதாக விஜய் சங்கர் வலைப்பயிற்சியில் காயமடைந்துள்ளார். பேட்டிங் பயிற்சியின் போது அவரது கையில் அடிபட்டுள்ளது. அதனால் அவர் பயிற்சி போட்டிகளில் ஆட வாய்ப்பில்லை. ஜூன் 5ம் தேதி நடக்கும் இந்திய அணியின் முதல் போட்டியில் ஆடுவாரா என்பது குறித்த தகவல் இன்னும் இல்லை. அவரது காயம் குறித்த அப்டேட் வரும்போதுதான் அவரது காயத்தின் தீவிரத்தன்மை தெரியும்.