2011 உலக கோப்பையை இந்திய அணி வென்ற தருணத்தை எந்த கிரிக்கெட் ரசிகராலும் மறந்துவிட முடியாது. 1983ல் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வென்ற பின்னர், 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்திய அணி கோப்பையை தூக்கியது. 

மும்பை வான்கடேவில் இந்தியா  மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடந்த இறுதி போட்டியில், இந்திய அணிக்கு 275 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை அணி. 275 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், சேவாக் ஆகிய இருவரது விக்கெட்டும் விரைவிலேயே விழுந்துவிட்டது. 

அதன்பின்னர் கண்டிப்பாக பெரிய பார்ட்னர்ஷிப் ஒன்றை அமைத்து, பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டிய கட்டாயம் கம்பீர் மீது இருந்தது. அப்போதைய இளம் வீரரான விராட் கோலியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டெடுத்தார் கம்பீர். கோலி அவுட்டானதும் தோனி களத்திற்கு வந்தார். தோனியுடனும் இணைந்து அபாரமாக ஆடிய கம்பீர், 97 ரன்களை குவித்து, இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்து வெற்றியை நோக்கி வீருநடை போடவைத்தார். தோனி அதிரடியாக ஆடி வெற்றிகரமாக போட்டியை முடித்து வைத்திருந்தாலும், அதற்கு அடித்தளமிட்டு கொடுத்தவர் கம்பீர். கம்பீரின் இன்னிங்ஸ் மிக முக்கியமானது. 

ஆனால் 97 ரன்களில் கம்பீர் அவுட்டானதுதான் வருத்தமான விஷயம். நன்றாக ஆடிக்கொண்டிருந்த கம்பீர், திடீரென 97 ரன்களில் அவுட்டாகிவிட்டு சென்றார். ஃபைனலில் சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டு சென்றார். இந்நிலையில், 8 ஆண்டுகளுக்கு பிறகு, தான் சதத்தை நழுவவிட்ட அந்த தருணம் குறித்தும் அதற்கான காரணத்தை கம்பீர் ஒன்றிரண்டு தினங்களுக்கு முன் பகிர்ந்திருந்தார். 

அதுகுறித்து பேசிய கம்பீர், உலக கோப்பை ஃபைனலில் இலங்கை அணி நிர்ணயித்த இலக்கை நோக்கி மட்டுமே ஆடிக்கொண்டிருந்த தன்னிடம் வந்து சதத்தை நினைவுபடுத்தியதே தோனி தான் எனவும், தோனி சதத்தை நினைவுபடுத்தியதால், தனது கவனம் அதன்பக்கம் திரும்பியதால் அழுத்தம் அதிகரித்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கம்பீர் 97 ரன்களுடன் களத்தில் இருந்தபோது, அவரிடம் சென்று தோனி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், ஸ்டம்பை விட்டு நகர்ந்து ஆஃப் திசையில் அடிக்குமாறு அறிவுறுத்தினார். தோனியின் அறிவுரையை ஏற்று, கம்பீரும் அதே மாதிரி ஆடமுயன்று அவுட்டானார். ஸ்டம்பை விட்டு நகர்ந்து எக்ஸ்ட்ரா கவர் திசையில் அடிக்க முயன்ற கம்பீர், கிளீன் போல்டாகி வெளியேறினார். 

97 ரன்கள் அடித்த கம்பீருக்கு எஞ்சிய 3 ரன்னை அடிப்பதோ, கடைசி வரை களத்தில் நின்று அணிக்கு வெற்றியை தேடிக்கொடுப்பதோ பெரிய விஷயமே அல்ல. ஆனால் அந்த நேரத்தில் கம்பீரிடம் சென்று தோனி பேசியது, அவரது கவனக்குவிப்பை சிதறடித்திருக்கக்கூடும்.