இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவின் பதவிக்காலம் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்துடன் முடிவடைகிறது. இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் மற்றும் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் பயிற்சியாளர்களுக்கான பதவிக்காக விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது பிசிசிஐ. 

ஜெயவர்தனே, டாம் மூடி, மைக் ஹெசன், ராபின் சிங் ஆகியோர் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர். ரவி சாஸ்திரியும் இந்த ரேஸில் இருப்பதால் போட்டி கடுமையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. கபில் தேவ், கெயிக்வாட், சாந்தா ரங்கசாமி அடங்கிய குழு, ஆகஸ்ட் மாத மத்தியில் தலைமை பயிற்சியாளருக்கான நேர்காணலை நடத்தவுள்ளது.

தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மட்டும் சுமார் 2000க்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருப்பதாக பிசிசிஐ தரப்பில் தகவல் வெளியானது. ஃபீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு ஜாண்டி ரோட்ஸ் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில், பவுலிங் பயிற்சியாளர் பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் வெங்கடேஷ் பிரசாத் விண்ணப்பித்துள்ளார். 

இந்திய அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலரான வெங்கடேஷ் பிரசாத், இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.