ஐபிஎல் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றுடன் லீக் சுற்று முடிந்த நிலையில், நாளை முதல் தகுதிச்சுற்று தொடங்குகிறது. லீக் சுற்றின் கடைசி போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக கேகேஆர் வீரர் உத்தப்பா படுமோசமாக ஆடினார். 

வெற்றி கட்டாயத்தில் ஒரு அணியின் டாப் பேட்ஸ்மேன் மிகவும் மோசமாக ஆடியவகையில், ஐபிஎல் வரலாற்றில் இதுதான் மோசமான இன்னிங்ஸாக இருக்கும். மும்பை வான்கடேவில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணி வெறும் 133 ரன்களை மட்டுமே எடுத்தது. 134 ரன்கள் என்ற இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணி எளிதாக எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் கேகேஆர் வீரர்கள் ஈடுபாடே இல்லாமல் ஆடியது மாதிரி தெரிந்தது. கிறிஸ் லின்னும் கில்லும் முதல் 6 ஓவர்களில் 49 ரன்களை அடித்து கொடுத்தனர். எஞ்சிய 14 ஓவர்களில் அந்த அணி வெறும் 84 ரன்கள் மட்டுமே அடித்தது. 

எஞ்சிய 14 ஓவர்களில், உத்தப்பா ரன் எடுக்க தவறிய டாட் பந்துகளே 4 ஓவர்கள். மிகவும் மோசமாக படுமந்தமாக ஆடினார் உத்தப்பா. அவரது ஆட்டத்தில் உற்சாகமோ ஆக்ரோஷமோ எதுவுமே இல்லை. சும்மா கடைசி வரை களத்தில் நின்றால் போதும் என்பது போல கேவலமாக ஆடினார். பெரிய ஷாட்டுகளை அடிக்க முனையவே இல்லை. மொத்தமாகவே ஒன்றிரண்டு பெரிய ஷாட்டுகள் மட்டுமே ஆடினார். 47 பந்துகள் ஆடி வெறும் 40 ரன்கள் மட்டுமே எடுத்தார். 

உத்தப்பாவின் மந்தமான பேட்டிங், ஃபீல்டரையே தூங்கவைக்கும் அளவுக்கு இருந்தது. அவரது பேட்டிங்கால் அந்த அணிக்கு எந்த நன்மையும் விளையவில்லை. மாறாக மும்பை இந்தியன்ஸுக்குத்தான் சாதகமாக அமைந்தது. வெற்றி பெற்றால் பிளே ஆஃபிற்குள் நுழையலாம் என்ற நிலையில், வெற்றி கட்டாயத்துடன் களமிறங்கிய ஒரு போட்டியில் அணியின் டாப் பேட்ஸ்மேன்களில் ஒருவராகவும் துணை கேப்டனாகவும் இருக்கிற ஒருவர் இவ்வளவு மந்தமாக ஆடியது இதுதான் முதன்முறையாக இருக்கும். கொஞ்சம் கூட அடித்து ஆட அவர் முயலவில்லை என்பதுதான் ஏற்றுக்கொள்ளவே முடியாத விஷயம்.

இதுதான் பெரும்பாலும் அவரது கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கக்கூடும். அடுத்த சீசனில் உத்தப்பா கழட்டிவிடப்பட வாய்ப்புள்ளது. அப்படி கழட்டிவிடப்பட்டால் வேறு எந்த அணியும் அவரை எடுக்க வாய்ப்பில்லை. எனவே இதுதான் பெரும்பாலும் அவரது கடைசி சீசன்.