விக்டோரியா மற்றும் குயின்ஸ்லாந்து அணிகளுக்கு இடையே கடந்த செப்டம்பர் 29ம் தேதி நடந்த போட்டியிலும் உஸ்மான் கவாஜா அபாரமாக ஆடி சதமடித்திருந்தார். அந்த போட்டியில் 138 ரன்களை குவித்தார் உஸ்மான். உஸ்மான் கவாஜாவின் அபாரமான பேட்டிங்கால் அந்த போட்டியில் 154 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது குயின்ஸ்லாந்து அணி. 

இந்நிலையில், அந்த இரு அணிகளுக்கு இடையே இன்று நடந்துவரும் போட்டியில் குயின்ஸ்லாந்து அணி முதலில் பேட்டிங் ஆடியது. தொடக்க வீரர்கள் உஸ்மான் கவாஜாவும் சாம் ஹீஸ்லெட்டும் இணைந்து சிறப்பாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அரைசதம் அடித்த ஹீஸ்லெட் 69 ரன்களில ஆட்டமிழந்தார். 

தொடர்ந்து சிறப்பாக ஆடிய உஸ்மான் கவாஜா இந்த போட்டியிலும் சதமடித்து அசத்தினார். இதற்கிடையே மார்னஸ் லபுஷேன் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். 125 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 115 ரன்களை குவித்தார் உஸ்மான் கவாஜா. உஸ்மான் கவாஜா செம ஃபார்மில் இருக்கிறார். அண்மையில் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் அணியில் ஆட வாய்ப்பு கிடைக்காத உஸ்மான் கவாஜா, உள்நாட்டு தொடரில் வெளுத்து வாங்கிவருகிறார். 

கவாஜா 115 ரன்களில் ஆட்டமிழக்க, மேட் ரென்ஷா சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். ரென்ஷா 66 ரன்கள் அடிக்க, குயின்ஸ்லாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் அடித்தது.

305 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிவரும் விக்டோரியா அணியின் தொடக்க வீரர் ஆரோன் ஃபின்ச் அடி வெளுத்துவருகிறார். எனவே இந்த முறை விக்டோரியா அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமுள்ளது.