13 ஆண்டுகளுக்கு பின் இந்திய மண்ணில் சதமடித்து உஸ்மான் கவாஜா சாதனை! கேமரூன் க்ரீன் பொறுப்பான பேட்டிங்
இந்தியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிவரும் ஆஸ்திரேலிய அணி, உஸ்மான் கவாஜாவின் அபாரமான சதத்தால் முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் அடித்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்துவருகிறது.
இந்த டெஸ்ட் போட்டியில் ஜெயித்தால் தொடரையும் வெல்ல முடியும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கும் முன்னேற முடியும் என்பதால், வெற்றி கட்டாயத்துடன் இந்த போட்டியில் களமிறங்கி ஆடிவருகிறது இந்திய அணி. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், உமேஷ் யாதவ், முகமது ஷமி.
ஆஸ்திரேலிய அணி:
டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப், கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், நேதன் லயன், டாட் மர்ஃபி, குன்னெமன்.
முதலில் பேட்டிங் ஆடிவரும் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் உஸ்மான் கவாஜா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகிய இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 61 ரன்களை சேர்த்தனர். டிராவிஸ் ஹெட் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் மார்னஸ் லபுஷேன் 3 ரன்களுக்கு ஷமியின் பந்தில் ஆட்டமிழந்தார்.
72 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில், அதன்பின்னர் உஸ்மான் கவாஜாவுடன் ஸ்டீவ் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இருவரும் களத்தில் நங்கூரம் போட்டு இந்திய ஸ்பின்னர்களை திறம்பட எதிர்கொண்டு 3 மணி நேரமாக விக்கெட்டே விட்டுக்கொடுக்காமல் சிறப்பாக ஆடினர். முதல் நாள் ஆட்டத்தின் டீ பிரேக் முடிந்து வந்ததும் 3வது செசன் தொடங்கியதுமே, ஸ்மித்தை ரன்னே அடிக்கவிடாமல் 38 ரன்களுக்கு அவுட்டாக்கி அனுப்பினார் ஜடேஜா.
கவாஜா - ஸ்மித் ஜோடியை பிரித்து பிரேக் கொடுத்தார் ஜடேஜா. அதன்பின்னர் ஹேண்ட்ஸ்கம்ப் 17 ரன்களுக்கு ஷமியின் பவுலிங்கில் ஆட்டமிழந்தார். அபாரமாக பேட்டிங் ஆடிய உஸ்மான் கவாஜா சதமடித்தார். 2010ம் ஆண்டுக்கு பின் 13 ஆண்டுகள் கழித்து இந்திய மண்ணில் சதமடித்த ஆஸ்திரேலிய தொடக்க வீரர் என்ற சாதனையை படைத்தார் உஸ்மான் கவாஜா. இதற்கு முன் கடைசியாக 2010ல் ஷேன் வாட்சன் இந்திய மண்ணில் சதமடித்திருந்தார்.
ICC WTC: இந்திய அணிக்கு அச்சுறுத்தல்.. நியூசிலாந்தில் பட்டைய கிளப்பும் இலங்கை
ஹேண்ட்ஸ்கம்ப் விக்கெட்டுக்கு பின், 5வது விக்கெட்டுக்கு கவாஜாவுடன் ஜோடி சேர்ந்த கேமரூன் க்ரீன், இந்திய பவுலிங்கை, குறிப்பாக ஃபாஸ்ட் பவுலிங்கை அடித்து ஆடி 49 ரன்களுடன் களத்தில் உள்ளார். முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் அடித்துள்ளது. உஸ்மான் கவாஜா 104 ரன்களுடனும், ஸ்மித் 49 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.