ICC WTC: இந்திய அணிக்கு அச்சுறுத்தல்.. நியூசிலாந்தில் பட்டைய கிளப்பும் இலங்கை
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிவரும் இலங்கை அணி அபாரமாக பேட்டிங் ஆடிவருகிறது.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்று அதிக வெற்றி விகிதங்களுடன் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் ஃபைனலுக்கு முன்னேறும். அந்தவகையில், இந்தியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட்டில் ஜெயித்ததன் மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் அணியாக ஃபைனலுக்கு முன்னேறிவிட்டது.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு 2வது அணியாக முன்னேற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இன்று அகமதாபாத்தில் தொடங்கி நடந்துவரும் 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஜெயித்தால் ஃபைனலுக்கு முன்னேறிவிடும்.
IND vs AUS: இந்தியா - ஆஸ்திரேலியா பிரதமர்கள் முன்னிலையில் நடக்கிறது அகமதாபாத் டெஸ்ட்..!
ஒருவேளை இந்திய அணி இந்த போட்டியில் தோற்று, இலங்கை அணி நியூசிலாந்தை 2-0 என டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் செய்தால் இலங்கை அணி ஃபைனலுக்கு முன்னேறும். இந்திய அணி இந்த டெஸ்ட்டில் தோற்று, இலங்கை அணி நியூசிலாந்திடம் ஒரு டெஸ்ட்டில் தோற்றால், இந்திய அணி ஃபைனலுக்கு முன்னேறிவிடும்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்கிய நிலையில், இலங்கை - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியும் இன்று தான் தொடங்கி நடந்துவருகிறது. நியூசிலாந்து - இலங்கை இடையே கிறிஸ்ட்சர்ச்சில் நடந்துவரும் முதல் டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிவரும் இலங்கை அணி சிறப்பாக பேட்டிங் ஆடிவருகிறது.
இந்த டெஸ்ட்டில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
நியூசிலாந்து அணி:
டாம் லேதம், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன், ஹென்ரி நிகோல்ஸ், டேரைல் மிட்செல், டாம் பிளண்டெல் (விக்கெட் கீப்பர்), மைக்கேல் பிரேஸ்வெல், டிம் சௌதி (கேப்டன்), மேட் ஹென்ரி, நீல் வாக்னர், பிளைர் டிக்னெர்.
இலங்கை அணி:
ஒஷாடா ஃபெர்னாண்டோ, திமுத் கருணரத்னே (கேப்டன்), குசால் மெண்டிஸ், ஆஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சண்டிமால், தனஞ்செயா டி சில்வா, நிரோஷன் டிக்வெல்லா (விக்கெட் கீப்பர்), கசுன் ரஜிதா, பிரபாத் ஜெயசூரியா, அசிதா ஃபெர்னாண்டோ, லஹிரு குமாரா.
முதலில் பேட்டிங் ஆடிவரும் இலங்கை அணியின் தொடக்க வீரர் ஒஷாடா ஃபெர்னாண்டோ 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும் மற்றொரு தொடக்க வீரரும் கேப்டனுமான திமுத் கருணரத்னே அரைசதம் அடித்தார். ஆனால் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 3ம் வரிசையில் இறங்கிய குசால் மெண்டிஸ் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டை போல் ஆடாமல் அடித்து ஆடிய குசால் மெண்டிஸ் 83 பந்தில் 16 பவுண்டரிகளுடன் 87 ரன்களை விளாசினார்.
அதன்பின்னர் ஆஞ்சலோ மேத்யூஸ் 47 ரன்களும், தினேஷ் சண்டிமால் 39 ரன்களும் அடித்தனர். டிக்வெல்லா 7 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 268 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி, 300 ரன்களை கடந்து ஆடிவருகிறது. இந்த டெஸ்ட்டில் ஜெயிக்கும் முனைப்பில் இலங்கை அணி சிறப்பாக ஆடிவருகிறது.