அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் உள்ள இஸ்கான் கோவில் மீது தொடர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான டாலர் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில், ஸ்பானிஷ் ஃபோர்க் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற இஸ்கான் ராதாகிருஷ்ணன் கோவில் மீது வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் தொடர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களுக்காக உலக அளவில் அறியப்படும் இக்கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

கடந்த சில நாட்களாக இக்கோவிலின் மீதும், அதனை சுற்றியுள்ள கட்டிடங்கள் மீதும் 20 முதல் 30 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான டாலர் அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து கோவில் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளதுடன், சேதமடைந்த பகுதிகள் குறித்த புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்து தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தால், கோவிலின் சிக்கலான சிறப்ப வேலைப்பாடுகளில் சேதம் ஏற்பட்டுள்ளது எனவும் கோயில் நிர்வாகம் கூறியுள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், இந்தத் தாக்குதல்கள் பக்தர்கள் மற்றும் விருந்தினர்கள் கோவிலுக்குள் இருக்கும்போது இரவு நேரங்களில் நடத்தப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக, கோவிலின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியத் தூதரகம் கண்டனம்

இச்சம்பவத்திற்கு அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "உட்டாவின் ஸ்பானிஷ் ஃபோர்க்கில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணா கோவிலில் அண்மையில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். அனைத்து பக்தர்களுக்கும் சமூகத்தினருக்கும் துணைத் தூதரகம் முழு ஆதரவை வழங்குகிறதுடன். குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த உள்ளூர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரும் தாக்குதல்கள்

இதேபோன்றதொரு சம்பவம் இந்த ஆண்டின் தொடக்கத்தில், மார்ச் 9 அன்று, கலிபோர்னியாவின் சினோ ஹில்ஸில் உள்ள BAPS சுவாமிநாராயண் கோவில் தாக்கப்பட்டது. லாஸ் ஏஞ்சல்ஸில் காலிஸ்தான் பொது வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னதாகத் தாக்குதல் நடந்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு, கலிபோர்னியாவின் சாக்ரமெண்டோவில் உள்ள BAPS சுவாமிநாராயண் கோயில் செப்டம்பர் 25ஆம் தேதி இரவு சேதப்படுத்தப்பட்டது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு நியூயார்க்கில் உள்ள கோவில் மீதும் இதேபோன்ற தாக்குதல் நடந்தது.