USA vs WI T20 WC 2024: அடுத்தடுத்து தோல்வி, அரையிறுதி வாய்ப்பை இழந்து நடையை கட்டிய அமெரிக்கா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று போட்டியில் அமெரிக்கா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய நிலையில் அரையிறுதி வாய்ப்பை இழந்து முதல் அணியாக வெளியேறியுள்ளது.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்தும் 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், குரூப் சுற்று போட்டியில் சிறப்பாக விளையாடிய அமெரிக்கா சூப்பர் 8 சுற்றுக்கு வந்தது. இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதையடுத்து கடைசி 2 போட்டிகளில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் அமெரிக்கா அணி இருந்தது. இந்த நிலையில் தான் இன்று வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய அமெரிக்கா அணியானது 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், விக்கெட் கீப்பர் ஆன்டீர்ஸ் கௌஸ் 29 ரன்கள் எடுத்தார். பவுலிங்கைப் பொறுத்த வரையில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஆண்ட்ரே ரஸல் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ரோஸ்டன் சேஸ் 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அல்ஜாரி ஜோசஃப் 2 விக்கெட்டும், குடகேஷ் மோட்டி ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் எளிய இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஷாய் ஹோப் 82 ரன்கள் எடுத்தார். ஜான்சன் சார்லஸ் 15 ரன்களும், நிக்கோலஸ் பூரன் 27 ரன்களும் எடுத்துக் கொடுக்கவே வெஸ்ட் இண்டீஸ் 10.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழந்து 130 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக வெஸ்ட் இண்டிஸ் 2 போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
அமெரிக்கா 2 போட்டிகளில் விளையாடி 2 போட்டியிலும் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்துள்ளது. அதோடு அரையிறுதி வாய்ப்பையும் இழந்து பரிதாபமாக டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. முதல் முறையாக சூப்பர் 8 சுற்றுக்கு வந்த அமெரிக்கா அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது. கடைசியாக நாளை நடைபெறும் 49ஆவது போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.