பாகிஸ்தான் அணி கண்டெடுத்த தலைசிறந்த வீரர்களில் ஒருவர் முகமது யூசுஃப். 1998ம் ஆண்டிலிருந்து 2010ம் ஆண்டுவரை பாகிஸ்தான் அணிக்காக ஆடினார் யூசுஃப்.

இன்சமாம் உல் ஹக், யூனிஸ் கான் வரிசையில் பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டரில் வலு சேர்த்தவர் யூசுஃப். மிடில் ஆர்டரில் இறங்கி, நடு ஓவர்களில் நங்கூரமிட்டு அணியை பல இக்கட்டான சூழல்களில் காப்பாற்றியவர். இந்திய அணியில் டிராவிட், லட்சுமணன் இருந்தது போல, பாகிஸ்தான் அணியில் யூனிஸ் கானும் முகமது யூசுஃபும் ஒரு காலத்தில் இருந்தனர். 

பாகிஸ்தான் அணிக்காக 90 டெஸ்ட் போட்டிகளிலும் 287 ஒருநாள் போட்டிகளிலும் ஆடியுள்ளார் யூசுஃப். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த பாகிஸ்தான் வீரர்களில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் யூசுஃப் தான். 

அதேபோல, யூசுஃப் 2006ம் ஆண்டு செய்த சாதனையை இதுவரை யாருமே முறியடிக்கவில்லை. விராட் கோலி, ஸ்மித், வில்லியம்சன், ரூட், புஜாரா என சிறந்த வீரர்களால், யூசுஃபின் டெஸ்ட் சாதனை ஒன்றை இதுவரை முறியடிக்க முடியவில்லை. 2006ம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் 1788 ரன்களை குவித்தார் யூசுஃப். ஒரு ஆண்டில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச டெஸ்ட் ரன் இதுதான். அதன்பின்னர் அதை இதுவரை யாருமே முறியடிக்கவில்லை. 

அப்பேர்ப்பாட்ட சாதனைக்கு சொந்தக்காரரும், பாகிஸ்தான் அணியின் தலைசிறந்த வீரர்களில் ஒருவருமான யூசுஃபுக்கு இன்று 45வது பிறந்தநாள். பிறந்தநாள் வாழ்த்துக்கள் யூசுஃப்.