டி20 உலக கோப்பை: விசா பிரச்னையால் ஆஸி.,க்கு பறக்கமுடியாத உம்ரான் மாலிக்..! இன்னொரு வீரரும் பாவம்
விசா பிரச்னை காரணமாக உம்ரான் மாலிக் மற்றும் குல்தீப் சென் ஆகிய இருவரும் டி20 உலக கோப்பையில் ஆட ஆஸ்திரேலியாவிற்கு செல்ல முடியவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. இன்று முதல் 21ம் தேதி வரை தகுதிப்போட்டிகளும், அதைத்தொடர்ந்து 22ம் தேதி முதல் சூப்பர் 12 சுற்று போட்டிகளும் நடக்கவுள்ளன.
இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக இந்திய அணி பார்க்கப்படுகிறது. ரோஹித், ராகுல், கோலி, சூர்யகுமார், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் என இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் வலுவாகத்தான் உள்ளது. சாஹல், அஷ்வின், அக்ஸர் படேல் என நல்ல ஸ்பின்னர்களும் உள்ளனர்.
இதையும் படிங்க - பாகிஸ்தான் அணியின் லெவலுக்கு இந்தியாவால் ஈடுகொடுக்க முடியாது..! டி20 உலக கோப்பைக்கு முன் கடும் எச்சரிக்கை
ஆனால் பும்ரா இல்லாததால் பவுலிங் யூனிட் தான் பலவீனமாக தெரிகிறது. புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல் டெத் ஓவர்களில் அதிக ரன்களை வழங்குகின்றனர். பும்ராவிற்கு மாற்று வீரராக அறிவிக்கப்பட்ட முகமது ஷமி, கடந்த ஓராண்டாக சர்வதேச டி20 போட்டியில் ஆடவில்லை. அதுமட்டுமல்லாது, 140-150 கிமீ வேகத்திற்கு மேல் வீசக்கூடிய மிரட்டல் ஃபாஸ்ட் பவுலர் இந்திய அணியில் இல்லாதது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
பும்ரா விலகியதால் அவருக்கு மாற்று வீரராக ரிசர்வ் பட்டியலில் இருந்த ஷமி எடுக்கப்பட்டார். ரிசர்வ் வீரர்களில் ஒருவராக இருந்த தீபக் சாஹரும் காயத்தால் விலகியதால், ஷமி மற்றும் தீபக் சாஹர் இடங்களில் சிராஜ் மற்றும் ஷர்துல் தாகூர் எடுக்கப்பட்டுள்ளனர். ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், சிராஜ், ஷர்துல் தாகூர் ஆகிய நால்வரும் ரிசர்வ் வீரர்களாக உள்ளனர்.
150 கிமீ வேகத்திற்கு மேல் வீசக்கூடிய உம்ரான் மாலிக் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார். எனவே அவரை கண்டிப்பாக டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் எடுத்திருக்க வேண்டும் என்று பிரெட் லீ, பரத் அருண் ஆகியோர் கருத்து கூறியிருந்தனர்.
ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரவி பிஷ்னோய்க்கு பதிலாக உம்ரான் மாலிக் மற்றும் குல்தீப் சென் ஆகிய இருவரையும் ரிசர்வ் வீரர்களாக ஆஸ்திரேலியாவிற்கு அனுப்ப பிசிசிஐ முயற்சி செய்துள்ளது. ஆனால் விசாவிற்கு கடைசிநேரத்தில் விண்ணப்பித்ததால் விசா கிடைக்கவில்லை என்றும், அதனால் தான் அவர்கள் இருவரும் ஆஸ்திரேலியா செல்லவில்லை என்றும் தெரிகிறது.
இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணி இதுதான்..! கேப்டன் ரோஹித் அதிரடி
இதுதொடர்பாக டுவிட்டரில் பெரும் விவாதமே நடந்துவருகிறது. ஆஸ்திரேலியா வேண்டுமென்றே உம்ரான் மாலிக்கிற்கு விசா வழங்கவில்லை என்றும், உம்ரான் மாலிக்கிற்கு பயந்து வழங்கவில்லை, உம்ரான் மாலிக் இல்லாததே தங்களுக்கு பெரிய வெற்றியாக ஆஸ்திரேலியா கருதுவதாகவும், நெட்டிசன்கள் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுவருகின்றனர். ஆனால் இதில் ஆஸ்திரேலியாவின் தவறு எதுவுமில்லை என்றும், கடைசிநேரத்தில் விண்ணப்பித்ததால் தான் விசா வழங்கப்படவில்லை என்றும் பேசப்படுகிறது.