”உங்களால் எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும் போல” என்று இந்திய வீரர்களிடம் அம்பயர் எராஸ்மஸ் கதறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட்டில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது டெஸ்ட் போட்டி ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்துவருகிறது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 202 ரன்கள் மட்டுமே அடிக்க, தென்னாப்பிரிக்க அணி 229 ரன்கள் அடித்தது. 27 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 266 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, 240 ரன்கள் என்ற இலக்கை விரட்டிவரும் தென்னாப்பிரிக்க அணி, 3ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் அடித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு இன்னும் 122 ரன்கள் தேவை. இரு அணிகளுமே வெற்றிக்காக கடுமையாக போராடிவரும் நிலையில், 4ம் நாள் ஆட்டம் மழையால் தாமதமாகியுள்ளது.

முதல் முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் தீவிரத்தில் உள்ள இந்திய அணி, வெற்றிக்காக மிகக்கடுமையாக போராடுகிறது. அந்தவகையில், வெற்றிக்காக போராடும் இந்திய வீரர்கள், எதிரணி வீரர்கள் மீது மட்டுமல்லாது அம்பயர்கள் மீது அழுத்தம் போடுகின்றனர்.

அந்தவகையில், இந்திய வீரர்களின் அப்பீலால் அம்பயர் எராஸ்மஸ் பரபரப்பிலேயே உள்ளார். தென்னாப்பிரிக்க அணியின் 2வது இன்னிங்ஸின் 10வது ஓவரை வீசிய ஷர்துல் தாகூர், அந்த ஓவரில் 2-3 முறை எல்பிடபிள்யூவிற்கு அப்பீல் செய்தார். அந்த ஓவரை அருமையாக வீசிய ஷர்துல் தாகூர், அதே ஓவரின் கடைசி பந்தில் மார்க்ரமை அவுட்டாக்கினார். மார்க்ரமுக்கு அவுட் கொடுத்த அம்பயர் எராஸ்மஸ், ஓவர் மாற்றத்தின்போது, இந்திய வீரர்களிடம், உங்களால் எனக்கு(அம்பயர் எராஸ்மஸ்) ஹார்ட் அட்டாக்கே வந்துரும் போல என்று கூறினார். 

அம்பயர் எராஸ்மஸ் கூறியது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Scroll to load tweet…