இப்படியும் ஒரு பிரதமரா? ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் பேட்டிங் செய்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்!
ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓவரில் பேட்டிங் செய்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்தில் தான் முதன் முதலாக கிரிக்கெட் விளையாடப்பட்டது. 16 ஆம் நூற்றாண்டில் தொடங்கி 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் கிரிக்கெட் விளையாட்டு பிரபலமடையத் தொடங்கியது. இந்திய வம்சாவளி பெற்றோருக்கு மகனாக பிறந்த ரிஷி சுனக் தற்போது இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருக்கிறார். கிரிக்கெட்டை அதிகம் விரும்பக் கூடியவர்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்களுடன் இணைந்து ஜாலியாக கிரிக்கெட் விளையாடி வரும் வீடியோ ஏற்கனவே வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது. ரிஷி சுனக் தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்த இங்கிலாந்து அணியில் சேர்ந்தபோது, அவர் தனது உற்சாகத்தை ஒரு புதிய நிலைக்கு உயர்த்தினார். இந்த நிலையில் தான் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சந்தித்து பேசியுள்ளார்.
அதோடு, நெட் பயிற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார். மேலும், நெட் செஷனில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து வீச ரிஷி சுனக் பேட்டிங் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோவை பிரதமர் ரிஷி சுனக் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் இந்தியா வந்த இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில், முதல் போட்டியில் மட்டுமே இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், எஞ்சிய 4 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4-1 என்று கைப்பற்றியுள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் போது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் 700 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார்.