கொரோனாவை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தியாவில் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிகப்பட்டுள்ளது. ஊரடங்கால் கிரிக்கெட் போட்டிகள் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன. 

ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வீரர்களின் நலனும் மக்களின் நலனும் தான் முக்கியம் என்பதால் இப்போதைக்கு ஐபிஎல்லை பற்றி யோசிக்க முடியாது என்றும், அதேநேரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்துவருவதாகவும் பிசிசிஐ தரப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐபிஎல்லால் பிசிசிஐக்கு சுமார் ரூ.3000  கோடி வருவாய் கிடைக்கும். அதை இழக்க பிசிசிஐ விரும்பாது. அதேவேளையில் இப்போதைக்கு ஐபிஎல்லை நடத்தக்கூடிய சூழல் சுத்தமாக இல்லை. கொரோனாவிலிருந்து மீண்டு நிலைமை சீரடைய தொடங்கினால், ரசிகர்கள் இல்லாமல் நடத்தலாம் என்றும் பேசப்படுகிறது. ரசிகர்கள் இல்லாமல் நடத்தினாலும் ஒளிபரப்பு உரிமத்தின் மூலமாக வருவாய் கிடைக்கும். 

ஆனால் எதுவுமே இதுவரை உறுதியில்லை. கொரோனாவிலிருந்து நாடு மீண்டால்தான் ஐபிஎல்லை பற்றி யோசிக்கப்படும். ஆனால் இதற்கிடையே மற்ற சில நாடுகள் தங்கள் நாட்டில் ஐபிஎல்லை நடத்த ஆர்வமாக உள்ளன. இலங்கை கிரிக்கெட் வாரியம், தேவையான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதாகவும், அதனால் இலங்கையில் ஐபிஎல்லை நடத்த பிசிசிஐயிடம் கோரியிருந்தது. 

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகமும் தங்கள் நாட்டில் ஐபிஎல்லை நடத்த பிசிசிஐக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த தகவலை பிசிசிஐ பொருளாளரே தெரிவித்துள்ளார். இதற்கு முன் 2009 மற்றும் 2014ம் ஆண்டுகளில் மக்களவை தேர்தலின் போது, ஐபிஎல் போட்டிகள் தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டிருக்கின்றன. 

ஆனால், மக்களின் நலனும் வீரர்களின் நலனும் பாதுகாப்புமே முக்கியம் என்பதால் இப்போதைக்கு ஐபிஎல் குறித்து முடிவெடுக்க முடியாது என்றும், மேலும் விமான போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டிருப்பதால் இப்போதைக்கு ஐபிஎல் குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாது என்றும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.