அண்டர் 19 உலக கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடந்தது. இதன் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை தவிர வேறு யாருமே சரியாக பேட்டிங் ஆடவில்லை. 

யஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டும் சிறப்பாக ஆடி 88 ரன்களை குவித்தார். அவரது பொறுப்பான பேட்டிங்கால் இந்திய அணி 177 ரன்களை அடித்தது. அவரும் சரியாக ஆடியிருக்கவில்லையென்றால், இந்த ஸ்கோர் கூட வந்திருக்க முடியாது. 177 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டானது. 

178 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் முதல் விக்கெட்டுக்கு 50 ரன்களை சேர்த்து கொடுத்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தாலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதை சரியாக பயன்படுத்தி கொள்ளாமல் மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர். 

ஒரு கட்டத்தில் 105 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது வங்கதேச அணி. ஆனால் அந்த அணியின் கேப்டன் அக்பர் அலியின் பொறுப்பான பேட்டிங்கால் அந்த அணி இலக்கை அடித்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதல் முறையாக அண்டர் 19 உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது. 

Also Read - வெற்றி போதையில் கேவலமாக நடந்துகொண்ட வங்கதேச வீரர்கள்.. மைதானத்தில் இந்தியா - வங்கதேச வீரர்கள் மோதல்.. வீடியோ

இந்நிலையில், போட்டிக்கு பின்னர் பேசிய அண்டர் 19 இந்திய கேப்டன் பிரியம் கர்க், தோல்விக்கான காரணத்தை கூறினார். ”இன்றைய தினம் எங்களுக்கு ரொம்ப மோசமான தினமாக அமைந்துவிட்டது. 177 ரன்கள் என்பது மிகக்குறைவான ஸ்கோர். 215-220 ரன்கள் அடித்திருந்தால் ஜெயித்திருக்கலாம். குறைந்த ஸ்கோர் அடித்திருந்தாலும், அதையும் தடுத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் எங்கள் பவுலர்கள் அபாரமாக வீசினார்கள். ஸ்கோர் குறைவாக இருந்தாலும், ஒரு அணியாக, வங்கதேசத்துக்கு எதிராக கடுமையாக போராடினோம். எங்கள் வீரர்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. கடுமையாக போராடிய எங்கள் வீரர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 

Also Read - சாமர்த்தியமான மின்னல் வேக ஸ்டம்பிங்.. தோனியை நினைவுபடுத்திய அண்டர் 19 விக்கெட் கீப்பர்.. வீடியோ

டாஸ் தான் முக்கியமான காரணியாக அமைந்துவிட்டது. ஏனெனில், ஆடுகளம் ஈரப்பதமாக இருந்தது. எனவே நாங்களும் டாஸ் ஜெயித்திருந்தால், சேஸிங் தான் செய்திருப்போம். எனவே டாஸும் தோல்விக்கு ஒரு காரணி. எங்கள் பவுலர்கள் நன்றாக பந்துவீசினார்கள். ஆனால் அதேநேரத்தில் வங்கதேச வீரர்களும் நன்றாக பேட்டிங் ஆடினார்கள். தென்னாப்பிரிக்காவில் ஆடியது நல்ல அனுபவம் என்று பிரியம் கர்க் தெரிவித்தார்.