உலக கோப்பை தொடரை பெரிய எதிர்பார்ப்புடன் எதிர்கொண்ட ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த உலக கோப்பையில் அந்த அணி 8 போட்டிகளில் ஆடிவிட்ட நிலையில், ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. 

பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் ஆஃப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. பயிற்சி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய நம்பிக்கையுடனும் உத்வேகத்துடனும் ஆஃப்கானிஸ்தான் களமிறங்கியது. இழப்பதற்கு ஒன்றுமில்லாத ஆஃப்கானிஸ்தான் அணி, பாகிஸ்தான் அணிக்கு வெற்றி கட்டாயத்தால் உருவான நெருக்கடியை பயன்படுத்தி வெற்றி பெறும் முனைப்பில் இருந்தது. 

அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணியின் ரஹ்மத் ஷா, அஸ்கர் ஆஃப்கான், இக்ரம் அலி கில், ஜட்ரான் ஆகியோர் நன்றாக தொடங்கினர். ஆனால் களத்தில் நிலைத்த அவர்கள், அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் தவறான நேரங்களில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்ததால் ஸ்கோர் வெகுவாக குறைந்தது. 250 ரன்களுக்கு மேல் எடுத்திருக்க வேண்டிய வாய்ப்பை பெற்றிருந்த ஆஃப்கானிஸ்தான் அணி 227 ரன்கள் மட்டுமே எடுத்தது.  

228 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஃபகார் ஜமான் முதல் ஓவரிலேயே முஜீபுர் ரஹ்மானிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பின்னர் இமாம் உல் ஹக்கும் பாபர் அசாமும் அபாரமாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், இரண்டாவது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்த அவர்கள் இருவரையுமே முகமது நபி தனது சுழலில் வீழ்த்தினார். 

அதன்பின்னர் சீரான இடைவெளியில் ஹஃபீஸ், ஹாரிஸ் சொஹைல், கேப்டன் சர்ஃபராஸ் ஆகியோர் ஆட்டமிழக்க, ஆட்டம் ஆஃப்கானிஸ்தானின் பக்கம் திரும்பியது. இமாத் வாசிம் களத்திற்கு வந்த கொஞ்ச நேரத்திலேயே ரஷீத் கானின் சுழலில் எல்பிடபிள்யூ ஆனார். ஆனால் அம்பயர் அதற்கு அவுட் கொடுக்கவில்லை. ரிவியூவும் இல்லாததால் அவரது விக்கெட் வாய்ப்பை ஆஃப்கானிஸ்தான் இழந்தது. ஆனால் அப்போது அவர்தான் கடைசியில் போட்டியை மாற்ற போகிறார் என்று ஆஃப்கானிஸ்தானுக்கு தெரிந்திருக்காது. ஏனெனில் கடைசியில் அவர் தான் அடித்து பாகிஸ்தான் அணியை வெற்றி பெற செய்தார். 

39 ஓவர் முடிவில் 156 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது பாகிஸ்தான் அணி. 25வது ஓவரிலேயே 100 ரன்களை எட்டிவிட்ட பாகிஸ்தான் அணியை அடுத்த 50 ரன்களை அடிக்க கடுமையாக போராட வைத்தனர் ஆஃப்கானிஸ்தான் பவுலர்கள். நபி, ரஷீத் கான், முஜீபுர் ரஹ்மான், ஷின்வாரி ஆகியோர் அபாரமாக வீசி ரன்களை கட்டுப்படுத்தியதோடு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஹமீத் ஹாசன் 2 ஓவர்கள் மட்டுமே வீசிய நிலையில் காயத்தால் வெளியேறியதால் குல்பாதின் நைப் ஒருவர் தான் ஆஃப்கானிஸ்தான் அணியின் ஃபாஸ்ட் பவுலிங் ஆப்சன். 

எனவே அவர் அவரது முழு கோட்டாவையும் வீசியாக வேண்டிய கட்டாயம் இருந்தது. அதைப் பயன்படுத்தி அவரை மட்டும் டார்கெட் செய்து அடித்தனர் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள். 

45வது ஓவர் வரை ஆஃப்கானிஸ்தான் கையில் தான் ஆட்டம் இருந்தது. 45 ஓவருக்கு 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. 46வது ஓவர் தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்துவிட்டது. ஆஃப்கானிஸ்தான் கேப்டன் குல்பாதின் நைப் வீசிய அந்த ஓவரில் ஒரு கேட்ச்சை அஸ்கர் ஆஃப்கான் தவறவிட்டார். அதுமட்டுமல்லாமல் நைபின் அந்த ஓவரில் 18 ரன்கள் அடிக்கப்பட்டது. அந்த ஓவர் ஆட்டத்தையே தலைகீழாக திருப்பிவிட்டது. அதன்பின்னர் 47,48, 49 ஆகிய ஓவர்களை ஸ்பின்னர்கள் மீண்டும் கட்டுக்கோப்பாக வீச, கடைசி ஓவரில் 6 ரன்கள் மட்டுமே தேவை என்பதால் அதை எளிதாக அடித்து வெற்றி பெற்றது பாகிஸ்தான் அணி.

46வது ஓவர் தான் ஆட்டத்தின் திருப்புமுனை. தற்போதைய கேப்டன் குல்பாதின் நைப் வீசிய அந்த ஓவரில் முன்னாள் கேப்டன் ஆஃப்கான், இமாத் வாசிமின் எளிதான கேட்ச்சை விட்டார். அந்த ஓவரில் 18 ரன்கள் கொடுக்கப்பட்டதுதான், ஆட்டத்தை ஆஃப்கானிஸ்தான் கையில் இருந்து பறித்தது. அனைத்து ஸ்பின்னர்களின் உழைப்பையும் ஒரே ஓவரில் தற்போதைய கேப்டன் குல்பாதின் நைபும் முன்னாள் கேப்டன் அஸ்கர் ஆஃப்கானும் இணைந்து சிதைத்துவிட்டனர். 

ரஷீத் கான் வீசிய 37வது ஓவரில் இமாத் வாசிமிற்கு அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. ஆனால் அது எல்பிடபிள்யூ தான் என்பது ரிப்ளேவில் தெரிந்தது. ரிவியூ இல்லாததால் அம்பயரின் புண்ணியத்தால் தப்பிய இமாத் வாசிம், 46வது ஓவரில் அஸ்கர் ஆஃப்கான் புண்ணியத்தால் மீண்டும் தப்பினார். கடைசியில் அவர்தான் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்த காரணமாக அமைந்தார்.