TNPL 2025 : Trichy vs Madurai : டிஎன்பிஎல் தொடரின் 23ஆவது லீக் போட்டியில் சீகம் மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியானது 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

TNPL 2025 : Trichy vs Madurai : ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா போன்று இப்போது தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 23ஆவது லீக் போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியும், சீகம் மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டி திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியின் கேப்டன் பவுலிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த சீகம் மதுரை பாந்தர்ஸ் அணியானது 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. அணியின் கேப்டன் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

சரத்குமார் அதிகபட்சமாக 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பவுலிங்கைப் பொறுத்த வரையில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியில் ஈஸ்வரன், அதிசயராஜ் டேவிட்சன், சரவண குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். பின்னர் எளிய இலக்கை துரத்திய திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியில் கேப்டனும், விக்கெட் கீப்பருமான ஜெயராமன் சுரேஷ் குமார் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நடுவரியில் விளையாடிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, கடைசியில் வந்த ராஜ்குமார் மற்றும் ஜாஃபர் ஜமால் இருவரும் அதிரடியாக விளையாடி அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தனர்.

இறுதியாக திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியானது 18.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலமாக புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடம் பிடித்துள்ளது. இதுவரையில் விளையாடிய 6 போட்டிகளில் 2 வெற்றி 4 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடம் பிடித்துள்ளது.

சீகம் மதுரை பாந்தர்ஸ் அணியானது விளையாடிய 6 போட்டிகளில் 2 வெற்றி 4 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடம் பிடித்துள்ளது. இதுவரையில் விளையாடிய 6 போட்டியிலும் வெற்றி பெற்று சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி மட்டுமே புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் நீடிக்கிறது. அதோடு முதல் அணியாக முதல் தகுதிச் சுற்று போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.