TNPL 2025 : Trichy vs LKK : டிஎன்பிஎல் 2025 தொடரில் இன்று நடைபெற்ற 15அவது லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணிக்கு எதிராக திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியானது 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டிஎன்பிஎல் 2025: திருச்சி கிராண்ட் சோழாஸ்
TNPL 2025 : Trichy vs LKK : தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் (டிஎன்பிஎல் 2025) 15ஆவது லீக் போட்டி சேலத்தில் இன்று நடைபெற்றது. இதில், திருச்சி கிராண்ட் சோழாஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியீல் ஆல்ரவுண்டர் ஆர் ராஜ்குமார் அதிரடியாக அரைசதம் அடிக்கவே அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது. இதில், அதிகபட்சமாக ராஜ்குமார் 24 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்ஸர் உள்பட 58 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் ஓரளவு ரன்கள் சேர்த்தனர்.
லைகா கோவை கிங்ஸ்
பின்னர் கடின இலக்கை துரத்திய லைகா கோவை கிங்ஸ் அணியானது இந்தப் போட்டியிலாவது வெற்றி பெற்று முதல் வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தப் போட்டியிலும் தோல்வியை தழுவ டிஎன்பிஎல் 2025 புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்துள்ளது. 169 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு லைகா கிங்ஸ் பேட்டிங் செய்தது. இதில், தொடக்க வீரர்களான ஜிதேந்திர குமார் 7 ரன்னுக்கு ஆட்டமிழக்க, சுரேஷ் லோகேஷ்வர் 11 ரன்னுக்கு நடையை கட்டினார்.
கேப்டன் ஷாருக்கான் சொதப்பல்
கேப்டன் ஷாருக்கான் 2 ரன்னிலும், குரு ராகவேந்திரன் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்வரிசை வீரர்கள் வரிசையாக சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க ஆண்ட்ரே சித்தார்த் மட்டும் அதிகபட்சமாக 39 ரன்கள் சேர்த்தார். மாதவ பிரசாத் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக லைகா கோவை கிங்ஸ் அணியானது 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் மட்டுமே எடுத்து 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
பவுலிங்கில் மாஸ் காட்டிய திருச்சி கிராண்ட் சோழாஸ் பவுலர்கள்:
பவுலிங்கைப் பொறுத்த வரையில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியில் அதிசயராஜ் டேவிட்சன் 4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். பேட்டிங்கில் அரைசதம் அடித்த ராஜ்குமார் 2 விக்கெட்டுகள் எடுத்தார். ஈஸ்வரன் மற்றும் சரவணக்குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
லைகா கோவை கிங்ஸ் தோல்வி
இந்தப் போட்டி உள்பட விளையாடிய 4 போட்டியிலும் லைகா கோவை கிங்ஸ் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திருச்சி கிராண்ட் சோழாஸ் 4 போட்டிகளில் முதல் வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடம் பிடித்துள்ளது.
வரும் 21ஆம் தேதி நடைபெறும் போட்டியில் திருச்சி அணியானது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை எதிர்கொள்கிறது. இதே போன்று 21ஆம் தேதி நடைபெறும் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியானது நெல்லை ராயல் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
டிஎன்பிஎல் வின்னர்ஸ் லிஸ்ட்
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் டிஎன்பிஎல் தொடரில் லைகா கோவை கிங்ஸ் அணியானது 2 (2022 மற்றும் 2023) முறை டிராபியை கைப்பற்றியுள்ளது. இதில், 2022 ஆம் ஆண்டு சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் இணைந்து டிராபியை கைப்பற்றின.
கடந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎல் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியானது சாம்பியன் பட்டம் வென்றது. கோவை கிங்ஸ் 2ஆவது இடம் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், நடப்பு ஆண்டுக்கான டிஎன்பிஎல் தொடரில் லைகா கோவை கிங்ஸ் அணியானது விளையாடிய 3 போட்டியிலும் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
