உலக கோப்பை தொடர் தென்னாப்பிரிக்க அணிக்கு மோசமானதாக அமைந்துள்ளது. இதுவரை 5 போட்டிகளில் ஆடி ஒன்றில் மட்டுமே வென்று 3 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசியிலிருந்து மூன்றாமிடத்தில் உள்ளது தென்னாப்பிரிக்க அணி. 

நியூசிலாந்து அணியோ 4 போட்டிகளில் ஆடி 3 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் மூன்றாமிடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி நல்ல பேலன்ஸான மற்றும் வலுவான அணியாக திகழ்கிறது. 

வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் நியூசிலாந்துடன் ஆடிவருகிறது தென்னாப்பிரிக்க அணி. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். மழையால் மைதானம் ஈரப்பதமாக இருந்ததால், ஒன்றரை மணி நேரம் தாமதமாக போட்டி தொடங்கப்பட்டது. 

இதையடுத்து தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் டி காக்கும் ஆம்லாவும் களமிறங்கினர். முதல் ஓவரை ஹென்ரி வீசினார். இதையடுத்து ட்ரெண்ட் போல்ட் வீசிய இரண்டாவது ஓவரிலேயே 5 ரன்களில் கிளீன் போல்டாகி வெளியேறினார் குயிண்டன் டி காக். 

தென்னாப்பிரிக்க அணியில் நல்ல ஃபார்மில் இருந்ததே டி காக் தான். எனவே தென்னாப்பிரிக்க அணி எதிரணி மீது ஆதிக்கம் செலுத்தி வெல்ல வேண்டுமென்றால் டி காக்கின் இன்னிங்ஸ் மிக முக்கியம். அப்படியிருக்கையில், நல்ல ஃபார்மில் இருக்கும் டி காக் 5 ரன்களில் நடையை கட்டி ஏமாற்றினார். 

ஆம்லா ஃபார்மில் இல்லாமல் தவித்துவந்தாலும் நிதானமாக ஆடிவருகிறார். ஆம்லாவுடன் கேப்டன் டுப்ளெசிஸ் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். இவர்கள் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட வேண்டிய கட்டாயத்தில் நிதானமாக ஆடிவருகின்றனர்.