மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் ஒருவர், ஐபிஎல்லில் ஆடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். 

ஐசிசி டி20 உலக கோப்பையை ஓராண்டுக்கு ஒத்திவைத்திருப்பதால், செப்டம்பர் 26 முதல் நவம்பர் முதல் வாரம் வரையிலான காலக்கட்டத்தில் ஐபிஎல்லை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ஐபிஎல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஐபிஎல்லுக்காகத்தான் இந்திய வீரர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டு வீரர்களும் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், ஐபிஎல் இந்த ஆண்டு நடப்பது உறுதியாகியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில், பார்வையாளர்கள் இல்லாமல் நடத்தப்படலாம் என தெரிகிறது. 

எனவே கிரிக்கெட் வீரர்கள் உற்சாகத்துடன் பயிற்சியை தொடங்கிவிட்டனர். இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த முறை ஏலத்தில் எடுத்துள்ள நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர் டிரெண்ட் போல்ட், தான் ஐபிஎல்லில் ஆடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார். மற்ற வெளிநாட்டு வீரர்கள் எல்லாம் ஐபிஎல்லில் ஆட ஆர்வமாக இருக்கும் நிலையில், டிரெண்ட் போல்ட் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். 

இதுகுறித்து பேசிய டிரெண்ட் போல்ட், எனது நலம் விரும்பிகளிடம் ஐபிஎல்லில் ஆடுவது குறித்து ஆலோசித்துத்தான் முடிவெடுக்க வேண்டும். என் கிரிக்கெட், என் குடும்பம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு பலவகையில் யோசித்து, பின் நல்ல முடிவை எடுப்பேன். நியூசிலாந்திலிருந்து இன்னும் சில வீரர்களும் ஐபிஎல்லில் ஆடுகின்றனர். எனவே ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

ஐபிஎல் குறித்து ஒவ்வொரு வாரமும் ஒரு அப்டேட் வருகிறது. நியூசிலாந்தில் நடக்கவிருப்பதாக கூட பேசப்பட்டது. எனவே இதுகுறித்து ஆலோசித்து எனக்கும் என் குடும்பத்திற்கும் பாதுகாப்பான வகையிலும் ஏற்ற வகையிலுமே முடிவெடுக்க முடியும் என்று டிரெண்ட் போல்ட் தெரிவித்துள்ளார். 

டிரெண்ட் போல்ட் கடந்த சில சீசன்களில் டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஆடிவந்த நிலையில், அவரை இந்த சீசனுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்துள்ளது. ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணி  தரமான ஃபாஸ்ட் பவுலர்களை பெற்றுள்ள போதிலும், டிரெண்ட் போல்ட்டையும் எடுத்தது. இந்நிலையில் தான், டிரெண்ட் போல்ட் இப்படி தெரிவித்துள்ளார்.