இலங்கை - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்துவருகிறது. 

போட்டி நடக்கும் கொழும்புவில் நேற்று காலை மழை பெய்ததால் ஆட்டம் தாமதமாக தொடங்கப்பட்டது. டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. இலங்கை அணியின் தொடக்க வீரர் திரிமன்னே 2 ரன்களில் சோமர்வில்லின் பந்தில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் தொடக்க வீரரும் கேப்டனுமான கருணரத்னேவுடன் குசால் மெண்டிஸ் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தனர். குசால் மெண்டிஸ் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் அனுபவ வீரர் மேத்யூஸ், கருணரத்னேவுடன் ஜோடி சேர்ந்தார். 

இவர்கள் இருவரும் களத்தில் இருக்க, முதல் நாள் ஆட்டம் முடிந்தது. இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, மேத்யூஸின் விக்கெட்டை வீழ்த்தினார் ட்ரெண்ட் போல்ட். பின்னர் அதே ஓவரிலேயே குசால் பெரேராவையும் வீழ்த்தினார் போல்ட். ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கையை மிரட்டினார் போல்ட். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லையும் எட்டினார் போல்ட்.

போல்ட் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் வீழ்த்த, அவரை தொடர்ந்து, மற்றொரு சீனியர் ஃபாஸ்ட் பவுலரான டிம் சௌதியும் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அரைசதம் கடந்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த கருணரத்னேவை 65 ரன்களில் வீழ்த்திய டிம் சௌதி, அதே ஓவரில் டிக்வெல்லாவையும் டக் அவுட் செய்து அனுப்பினார். கருணரத்னேவின் விக்கெட் மிக முக்கியமானது. அதை வீழ்த்தி நியூசிலாந்து அணியின் வேலையை எளிதாக்கினார் சௌதி. 

ட்ரெண்ட் போல்ட்டை தொடர்ந்து டிம் சௌதியும் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கையை மிரட்டினார். இலங்கை அணி இரண்டாம் நாளான இன்றைய ஆட்டத்தின் மதிய உணவு இடைவேளை வரை 6 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் அடித்துள்ளது. 

டிம் சௌதி, இந்த 2 விக்கெட்டுகளுடன் சேர்த்து 247 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டார். இன்னும் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினால், 250 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற  மைல்கல்லை எட்டிய நான்காவது ஃபாஸ்ட் பவுலர் என்ற பெருமையை பெறுவார். இந்த போட்டியில்தான் ட்ரெண்ட் போல்ட்டும் இந்த மைல்கல்லை எட்டிய நிலையில், சௌதியும் எட்டினால் தரமான சம்பவமாக அமையும்.