சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக விராட் கோலி திகழ்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் விராட் கோலி, பேட்டிங்கில் பல சாதனைகளை முறியடித்து புதிய மைல்கற்களை செட் செய்துவருகிறார். இதுவரை 70 சர்வதேச சதங்களை விளாசியுள்ள விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் அதிக சதங்கள் மற்றும் அதிக ரன்கள் ஆகிய சாதனைகளை முறியடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.   

டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து விதமான போட்டிகளிலும் அசத்தலாக ஆடி தனது அபாரமான பேட்டிங்கால் சர்வதேச அளவில் பல பெரிய பெரிய ஜாம்பவான்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார் விராட் கோலி. 

சமகால கிரிக்கெட்டில் விராட் கோலியை போலவே பாகிஸ்தானின் பாபர் அசாமும் சிறந்த பேட்ஸ்மேன் தான் என்றும், அவர் இன்னும் நிறைய போட்டிகளில் ஆடவில்லை; ஆனால் அவரது அனுபவம் அதிகமாகும் போது அவரும் விராட் கோலியை போலவோ அல்லது விராட் கோலியையே மிஞ்சிய பேட்ஸ்மேனாகவோ திகழ்வார் என்று பல ஜாம்பவான்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். ஆனால் விராட் கோலியின் சிறப்பம்சமே அவரது கன்சிஸ்டன்ஸி(தொடர்ச்சியாக சீராக ஆடுவது) தான். பாபர் அசாம் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும் தொடர்ச்சியாக 10 ஆண்டுகளுக்கு சீரான ஆட்டத்தை ஆடுவாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 

இந்நிலையில், பாகிஸ்தான் ஊடகம் ஒன்றில் பேசிய ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும் பல அணிகளுக்கு பயிற்சியளித்திருக்கும் அனுபவத்தை கொண்டவருமான டாம் மூடி, பாபர் அசாமை புகழ்ந்து பேசியிருக்கிறார். 

பாபர் அசாம் குறித்து பேசிய டாம் மூடி, கடந்த ஆண்டிலேயே இவர் சிறந்த பேட்ஸ்மேனாக உருவெடுப்பார் என்ற எண்ணத்தை அனைவரது மனதிலும் விதைத்தவர் பாபர் அசாம். விராட் கோலி தலைசிறந்த பேட்ஸ்மேன் என்று பேசிக்கொண்டிருக்கிறோம். விராட் கோலியை புகழ்ந்து பேசுபவர்கள், பாபர் அசாமின் பேட்டிங்கையும் பார்க்க வேண்டும். அவர் அடுத்த 5-10 ஆண்டுகளில், ஒரு பத்தாண்டின் டாப் 5 பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்வார். 

பாபர் அசாமிற்கு இப்போது அனுபவம் குறைவுதான். 26 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். எனவே அவரது இப்போதைய நம்பரை வைத்து அவரது திறமையை மதிப்பிட முடியாது. போகப்போக பாருங்கள். தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்வார் என்று டாம் மூடி வெகுவாக புகழ்ந்திருக்கிறார். 

பாபர் அசாம் 26 டெஸ்ட், 74 ஒருநாள் மற்றும் 38 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார்.